பிரேமலதாவிடம் ஸ்டாலின் முன்கூட்டியே பேசினாரா? 100% பச்சைக்கொடி.. தேமுதிக முடிவின் பிண்ணனி கணக்கு?

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் இப்போது கதகதவென அனலடிக்க ஆரம்பித்து விட்டது.. திமுக, அதிமுக, தவெக என முக்கிய கட்சிகள் களத்தில் இருக்கும் நிலையில், கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கியுள்ளன.. இப்படிப்பட்ட சூழலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எடுத்துள்ள முடிவு, வெறும் ஆதரவு அறிவிப்பாக மட்டும் பார்க்க முடியாத அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. தற்போது இந்த போட்டியில் தேமுதிகவும் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம்

    இதற்கான அறிவிப்பை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலிலும் அந்த ஆதரவு தொடர்கிறது. குறிப்பாக, இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தானே பிரச்சாரம் செய்யப்போவதாக பிரேமலதா தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

    இதுகுறித்து பிரேமலதா சொல்லும்போது, "தமிழக இடைத் தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக ஆதரவு அளிக்கும். ஏற்கனவே இது பற்றி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.. அப்போதே நான் இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வர இருக்கும் இடைத்தேர்தலுக்கும் ஆதரவு கொடுப்போம் எனத் தெரிவித்தேன்.

    Advertisement

    பிரேமலதா விஜயகாந்த்

    திமுக வேட்பாளர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிக, திமுகவிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவாக இருக்கும். திமுக வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். திமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரத்திலும் ஈடுபடுவேன்.

    வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன" என்று திடமாக அறிவித்துள்ளார்.

    இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், திமுக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்திடம் பேசியதாக அவர் கூறியிருப்பதுதான்.

    Advertisement

    100 சதவீதம் ஆதரவு

    தேமுதிக கண்டிப்பாக திமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கும் என்றும், திமுகவுக்கு தேமுதிகவின் ஒத்துழைப்பு 100 சதவீதம் இருக்கும் என்றும் ஸ்டாலினிடம் தெரிவித்ததாக பிரேமலதா கூறியுள்ளார். மேலும், பரந்தாமனையும் சுகன்யாவையும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு தேமுதிக ஆதரவு வேண்டும் என்றும் ஸ்டாலின் தன்னிடம் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமல்ல, தனது ஒப்புதலோடுதான் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். அப்படியானால், இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவின் ஆதரவை திமுக முன்கூட்டியே உறுதி செய்ய முயன்றிருப்பது தெளிவாகிறது.

    பிரேமலதாவின் இந்த அறிவிப்பை தேர்தல் கணக்கில் வைத்து பார்த்தால், இது திமுகவுக்கு கிடைக்கும் ஒரு கூடுதல் அரசியல் ஆதரவு. காரணம், இந்த இடைத்தேர்தல் வழக்கமான 2 முனைப் போட்டியாக இல்லை. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என களம் பல முனைகளாகப் பிரிந்துள்ளது. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

    Advertisement


    திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை?

    இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால்தான் இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த தேர்தல் திமுகவுக்கு ஆட்சிக்கு எதிரான மனநிலையை அளவிடும் களமாகவும், தவெகவுக்கு தனது தேர்தல் வலிமையை நிரூபிக்கும் முதல் பெரிய சான்ஸாகவும் பார்க்கப்படுகிறது.

    அதனால், தேமுதிகவின் ஆதரவு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறுகிறது என்பதுதான் அடுத்த கேள்வி. குறிப்பாக பிரேமலதாவே பிரச்சாரத்தில் இறங்கும்போது, விஜயகாந்த் காலத்தில் தேமுதிகவுக்கு இருந்த ஆதரவு வாக்குகளில் எவ்வளவு பகுதி திமுகவுக்கு செல்கிறது என்பதும் தேர்தல் முடிவில் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.

    Advertisement

    தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    இன்னும் செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் தேர்தல் பணிகள் எந்த அளவுக்கு தீவிரமாகிறது என்பதும் தெரியும்.

    மொத்தத்தில், பிரேமலதாவின் இந்த முடிவு ஒரு இடைத்தேர்தல் ஆதரவு என்ற அளவைத் தாண்டி, தேமுதிக தனது தற்போதைய கூட்டணி அரசியலை எப்படி முன்னெடுக்கப் போகிறது என்பதற்கான ஒரு முக்கிய அரசியல் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Premalatha Vijayakanth.. Why Did Stalin Reach Out to Her Before the Bypolls?.. What Does DMDK’s 100% Support Mean?