கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு

  • சென்னை: தமிழக கோயில்களில் பக்தர்களுக்கு தரமான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கோயில் வளாகங்களில் செயல்படும் கடைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ளார். கோயில் வளாகங்களில் செயல்படும் கடைகளில் விற்கப்படும் அனைத்து பூஜை பொருட்களுக்கும் விலை பட்டியல் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும், தரமான மற்றும் அரசின் அனுமதி பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ரமேஷ், கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பக்தர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்தல், நிர்வாக முறைகேடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    Advertisement

    அந்த வகையில், கோயில் வளாகங்களில் செயல்படும் கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பூஜைக்கு பயன்படுத்தப்படும் தரமான மற்றும் அரசின் அனுமதி பெற்ற பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை பக்தர்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், கோயில் வளாகங்களில் ஒழுங்குமுறையை நிலைநாட்டவும் உதவும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, கோயில் வளாகங்களில் உள்ள அனைத்து கடைகளிலும் பூஜைப் பொருட்களின் விலைப்பட்டியல் கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். பக்தர்களிடம் கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும், பூஜை மற்றும் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், பக்தர்கள் கேட்காத பொருட்ளை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், அரசின் அனுமதி பெறாத எந்தவொரு பொருளையும் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யக் கூடாது எனவும் அமைச்சர் ரமேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விதிமுறைகளை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அனைத்து கோயில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜைப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

    Advertisement

    சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்.

    நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது. மஞ்சள் துணிப் பையை மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும். தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிப்படையான மற்றும் ஒழுங்குமுறையான விற்பனை நடைமுறைகளை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    English Summary

    The HR&CE Department has directed all temple shops to display price lists for pooja materials and sell only approved, quality products. Minister Ramesh stated that the move aims to ensure transparency and protect devotees from unfair practices.