தனியார் பால் விலை தாறுமாறு உயர்வு.. பால் சந்தையை கட்டுக்குள் வைக்க அரசுக்கு அன்புமணி கொடுத்த ஐடியா!

  • சென்னை: தனியார் பால் விலை 8 மாதங்களில் மூன்றாம் முறையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி சந்தையை கட்டுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலை இன்று (செப்டம்பர் 26) முதல் உயர்கிறது. பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலை கிலோவுக்கு ரூ.2 வரையும் உயர்த்தப்படுகிறது. பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தனியார் பால் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும் மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

    3 சதவீத கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பாலின் விலையை அரை லிட்டருக்கு ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை ரூ.35-ல் இருந்து ரூ.37ஆகவும், 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலையை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

    Advertisement

    இது 2026-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ள மூன்றாம் விலை உயர்வு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்போது வரையிலான 8 மாதங்களில் மட்டும் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் ஜூலை, செப்டம்பர் என இரு முறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ.30 கூடுதலாக ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.84-க்கு விற்பனை செய்கின்றன.

    Advertisement

    தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடில்லாமல் பால் விலையை உயர்த்துவதற்கு காரணம் தமிழ்நாட்டின் பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் அவற்றின் கைகளில் வைத்திருப்பது தான். தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 16% மட்டுமே. இப்போது அது 12% அளவுக்கு குறைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

    அதனால், ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் பால் விற்பனை செய்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த நிறுவனத்தால் பால் வழங்க முடியாததாலும், தனியார் நிறுவனங்கள் 84% - 88% சந்தையை தங்களிடம் வைத்திருப்பதாலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

    Advertisement

    தனியாருக்கு போட்டியாக தமிழ்நாட்டில் 50% சந்தையைக் கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டும் தான் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். எனவே, ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டவும், தனியார் பால் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து அதன் விலையை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    With the price of private milk having been raised for the third time in eight months, PMK leader Anbumani Ramadoss has urged that Aavin be revitalized to bring the market under control.