சென்னை: தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், தடையில்லா சான்றிதழை உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது உறவினர்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகளிடம் இருந்து இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 16 ஆம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, 18 ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் போலீசார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அன்பில் மகேஷிடம் 248 கேள்விகளை போலீசார் எழுப்பி, அதற்கு பதில்களைப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் அருண் பிரகாஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் அன்பில் மகேஷ் உதவியாளராக இருந்த அருண் பிரகாஷ் மூலமாகதான் பி.டி அரசகுமார் உள்ளிட்ட நபர்கள் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் விசாரனை நடைபெற்றது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் முழுமையாக வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணை இரவு வரை நீடித்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.