தனியார் பள்ளிகளிடம் 100 கோடி? பி.டி.அரசகுமாரை தொடர்ந்து முன்னாள் திமுக எம்எல்ஏவும் கைதாகுகிறார்?

  • சென்னை தியாகராயநகரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் ''சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை பி.டி.அரசகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்பு உள்ளதாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகவும் எங்களிடம் கூறினார்.

    Advertisement

    எங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி பெறுதல் ஆகியவற்றுக்காக கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால். பி.டி.அரசகுமாரை அணுகுகிறோம்.

    Advertisement

    அவர் தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்வு மற்றும் திட்ட அனுமதி போன்றவற்றை பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தார். ஆனால் உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றியுள்ளார். எனவே அரசகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இப்புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதியதால் வழக்குபதிவு செய்தனர். அத்துடன் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் 59 வயதாகும் பி.டி.அரசகுமாரை அண்மையில் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    இதையடுத்து திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமார் மீது பலரும் குற்றச்சாட்டுகளை கூற தொடங்கினர். இதையடுத்து சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள அவரது வீட்டில் வழக்கு தொடர்பான ஆவணங்களை மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் பொருட்டு சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மோசடி வழக்கில், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போரீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த முன்னாள் எம்.எல்.ஏ. தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலிப்பதற்காக, சென்னை தியாகராயநகரில் தனி அலுவலகம் ஒன்றை நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தள்ளது.

    Advertisement

    இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசகுமாரிடமோ அல்லது குறிப்பிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.விடமோ பணம் கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி நிர்வாகிகள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த முன்னாள் எம்எல்ஏ யார் என்பது தான் இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.

    English Summary

    Following P.T. Arasakumar, is a former DMK MLA also set to be arrested in the case involving the fraudulent collection of ₹100 crore from private schools?