நான் இந்து.. இந்து முறைப்படி கல்யாணம் நடத்துவதில் என்ன தவறு? துரைமுருகன் சம்மந்தி கண்ணன் ரவி பதிலடி

  • சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமண விழா இந்து முறைப்படி நடந்தது பெரியளவில் சர்ச்சையானது. இதற்கிடையே மணமகன் வீட்டாரான தயாரிப்பாளர் கண்ணன் ரவி இது தொடர்பாக அதிரடி கருத்துகளை கூறியிருக்கிறார். வைதீக முறைப்படி திருமணம் நடப்பது தனது உரிமை என்றும் அதை விட்டு கொடுக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்திக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் இந்து பாரம்பரிய முறைப்படி, வைதீகச் சடங்குகள் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இது திராவிட இயக்கத்தினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    Advertisement

    விமர்சனம்

    பலரும் துரைமுருகனை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக திக தலைவர் வீரமணி காட்டமான அறிக்கையை இது தொடர்பாக வெளியிட்டிருந்தார். இதற்கிடையே இந்த விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி காட்டமாக பதிலளித்துள்ளார். இன்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தனது மகனின் திருமணத்தை எந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்வது குடும்பத்தின் தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்தார். மேலும், மதம் சார்ந்த உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

    இது குறித்து பேசிய கண்ணன் ரவி, "ஒரு முஸ்லிம் தனது முறைப்படி மசூதியில் திருமணம் நடத்துகிறார். ஒரு கிறிஸ்தவர் சர்ச்சில் திருமணம் நடத்துகிறார். அதேபோல நான் ஒரு இந்து. என் வீட்டு திருமணத்தை இந்து பாரம்பரிய முறைப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? இது கட்சி விவகாரம் கிடையாது. முற்றிலும் தனிப்பட்ட குடும்ப விஷயம்.

    Advertisement

    தனிப்பட்ட முடிவு

    இரு வீட்டாரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய ஒன்று. என் மகனின் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையோ இல்லை. தைரியமாக சொல்கிறேன். திரும்பவும் திருமணம் நடந்தாலும் இதேபோல இந்து ஐதீக முறைப்படிதான் நடத்துவேன்.

    எனது உரிமை

    ஒவ்வொரு மதத்துக்கும், மொழிக்கும் என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவற்றை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. என் மதத்துக்கான உரிமையை யார் தடுத்தாலும் நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அப்படி பார்த்தால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை எத்தனை தலைவர்களின் குடும்பத்தினர், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் கோயிலுக்கு போய் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

    Advertisement

    உங்க குடும்பத்தை பாருங்க!

    தங்கள் சொந்த குடும்பத்தையே கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக வெளியில் வந்து பேச வேண்டும்? இந்த விவகாரம் குறித்து அறிக்கை கொடுத்தவர்களையே எடுத்து பாருங்கள். அவர்களின் உண்மையான பின்னணி என்னவென்று உங்களுக்கே தெரியும். நான் நீண்ட காலமாக துபாயில் வசித்து வருவதால், இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் எனக்கு தெரியாது என்று நினைத்துவிட வேண்டாம்.

    35 வருடங்களாக துபாயில் இருக்கிறேன் என்பதற்காக எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். தினந்தோறும் பத்திரிகைகளைப் படிக்கிறேன், செய்திகளை பார்க்கிறேன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு முழுமையாகத் தெரியும்" என்று கண்ணன் ரவி ஆவேசமாக பேசினார்.

    English Summary

    Producer Kannan Ravi defends his son's Hindu traditional wedding with Duraimurugan's granddaughter(துரைமுருகன் இல்ல திருமண விழா விமர்சனம்): Duraimurugan Family Wedding latest news in tamil.