சொத்து வரி தாறுமாறா வந்து இருக்கா? ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு

  • சென்னை: சென்னையில் சொத்து வரி முன்னறிவிப்பு இன்றி 300 சதவீதம் வரை பரவலாக உயர்ந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், சொத்து மதிப்பீடு உயர்வு தொடர்பான ஆட்சேபனைகளை சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகோ தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடமிருந்து அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. இதேபோல, சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியே பிரதான வருவாயாக உள்ளது.

    Advertisement

    சென்னையில் சொத்து வரி உயர்வு

    இதன் மூலமே சுகாதாரம், அடிப்படை உள்கட்டமைப்புகள், தூய்மை பணி, திடக்கழிவுகள் அகற்றுதல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சி தற்போது நிதி பற்றாக்குறையில் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள சொத்துவரியை தீவிர வரி வசூலிப்பின் மூலம் பெற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    துணை மேயர் மகேஷ்குமார் பேச்சு

    இந்த சூழலில்தான், சொத்து வரி பலருக்கும் 300 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. எந்த முன்னறிவிப்போ, நோட்டிசோ இன்றி பலமடங்கு சொத்து வரி உயர்ந்து இருப்பதாக சென்னை வாசிகள் தங்கள் வேதனையை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இது குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், "வணிக கட்டிடங்கள் 3.5 லட்சம் பேருக்கு மறு மதிப்பீடு செய்கிறார்கள்.

    Advertisement

    சென்னை மாநகராட்சியின் நிதி நிலமை மிக மோசமாக உள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் 3,500 கோடி ரூபாய் வழங்க வேண்டிய நிலுவை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. 4 ஆயிரம் கோடிக்கு மேல் பற்றாக்குறை உள்ளது. நிறைய கட்டிடங்கள் குடியிருப்பு கட்டிடங்களாக அறிவித்து இருப்பார்கள். ஆனால், குடியிருப்புதளங்கள் இல்லாமல் வியாபார தளங்களாக மாற்றியிருப்பார்கள். வியாபார அலுவலகம் என்றால் வரி வேறுபடும்.

    எங்களிடம் கருத்து கேட்கவில்லை

    குடியிருப்பு பகுதிக்கு ஒரு வரி மதிப்பீடு இருக்கும். வியாபார தளம் என்றால் வரி மதிப்பீடு வேறு இருக்கும். எனவே குடியிருப்பு பகுதிகளாக அறிவித்துவிட்டு கமர்ஷியல் பகுதியாக மாற்றியிருந்தால் வியாபார ஸ்தலத்திற்கான வரி மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். வருவாயை பெருக்க வேண்டும் என்று திடீரென்று மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எங்களிடம் இருந்து எந்த கருத்தும் கேட்கவில்லை.

    Advertisement

    எங்களிடம் கருத்து கேட்டால் மறு ஆய்வு செய்ய வேண்டாம் என்று சொல்வோம் என்பதால், எங்களிடம் ஒப்புதல் பெறாமல் நிர்வாகமே ஆணையரே மறு மதிப்பீடு செய்யும் பணிகளை ஆரம்பித்து இருக்கிறார். அரசிடம் இருந்து சிறப்பு நிதியை பெற்று இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும் வகையில் மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மறு மதிப்பீடு பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்.

    ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம் - மாநகராட்சி

    அதே நேரத்தில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில்தான், சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து மதிப்பீடு உயர்வு தொடர்பான ஆட்சேபனைகளை சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகோ தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Property tax: Amidst public complaints regarding widespread property tax hikes of up to 300% without prior notice, the Chennai Corporation has announced that objections concerning the increase in property assessment can be submitted either in person or via email to the Zonal Deputy Commissioner's office. The public may begin registering their grievances starting at 10:00 AM tomorrow.