பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது.. வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!

  • சென்னை: "பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது. தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் திமுகவிற்குத்தான் அதிகமாக இருக்கிறது." என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    Advertisement

    சென்னை வானகரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 5000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    Advertisement

    இந்த நிகழ்வில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பொருளாளராக இருந்த கழகத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் எம்.ஜி.ஆர் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அவர் தனிக்கட்சி தொடங்கிய பின்னும், சட்டமன்றத்தில் கலைஞர் பெயரைச் சொல்லி விமர்சித்த உறுப்பினரைக் கண்டித்து, 'உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம், எனக்குத் தலைவர் கலைஞர்தான்' எனக் கூறி வார்த்தையை வாபஸ் பெறச் செய்தார்.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், கொள்கைதான் முக்கிய என நீங்கள் திமுகவில் இணைந்துள்ளீர்கள். திமுக வலிமையாக இருந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என திமுகவில் சேர்ந்துள்ளீர்கள். திமுகவை போல வெற்றிபெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளது. திமுக ஆட்சியின் மேல் இருந்த நம்பிக்கையில்தான் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன.

    Advertisement

    ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பற்றி சொல்லத்தேவையில்லை. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் கொடுமை, பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள், கொள்ளைகள், அராஜகம் நடக்கிறது. டிவியில் செய்தியில் இதுதான் கண்ணில் படுகிறது. குறிப்பாக நிறைய குற்றங்களில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுதான் வேதனை.

    ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் டேக் டைவர்ஷன் என திசை திருப்பும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர்.தவெக ஆட்சியில் ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள், ஓட்டு போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது. தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் திமுகவிற்குத்தான் அதிகமாக இருக்கிறது.

    Advertisement

    மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும். எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம், நாம் அதற்கு 100% தயாராக இருக்க வேண்டும். மக்களைக் காக்கவேண்டிய பொறுப்பு திமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது." எனப் பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

    English Summary

    "We must not allow Tamil Nadu—nurtured with such great care—to go to ruin. The responsibility and duty to protect Tamil Nadu rest primarily with the DMK," said DMK leader MK Stalin.