SSLC மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

  • சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகின. இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத் தேர்வை சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

    Advertisement

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்தனர். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    மாவட்ட வாரியான தேர்ச்சிப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் 97.41 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. மேலும் திருச்சி 97.31 சதவீதமும், கன்னியாகுமரி 97.30 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றன.

    Advertisement

    இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் (ஸ்கேன் நகல்) பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று காலை 11 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை (24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 ஆகும்.

    Advertisement

    விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுக்கூட்டல், மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான தேதி ஊடகங்கள் வாயிலாகவும், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்திலும் வெளியிடப்படும் என்றார்.

    English Summary

    Provisional Certificates: Students who appeared for the 10th standard public examination can collect their provisional mark certificates starting today. The certificates are being distributed through schools and official education portals.