தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி 5 நாட்களும் பிடி பீரியட்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

  • சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தில் இனி 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். வாரத்தில் 3 நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடக்கும் என்றும், மற்ற இரு நாள்களும் மற்ற செயல்பாடுகளுக்கான அதாவது எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் வகுப்புகளும் தேவைப்பட்டால் உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. உடற்கல்வி, இணையதள கல்வி ஆகியவற்றுற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தினந்தோறும் உடற்கல்வி வகுப்பு வேண்டும் என்று நீண்ட நாட்களாக மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    Advertisement

    வாரத்தில் 5 நாட்கள் பிடி பீரியட்

    வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே உடற்கல்வி வகுப்பு என்ற சூழ்நிலையை மாற்றி, முதல்வர் விஜயின் ஆணைப்படி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் வருவதற்கான வழிவகை செய்யும் வகையில், திருத்திய கால அட்டவணை வழங்கப்படும். அதன்படி, வாரத்தில் 3 நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடக்கும். மற்ற இரு நாள்களும் மற்ற செயல்பாடுகளுக்கான அதாவது extra curricular activities வகுப்புகளும் தேவைப்பட்டால் உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.

    அதன்படி, மாணவர்களுக்கு தினந்தோறும், 5 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும். அனைத்து மாணவர்களின் சார்பில் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தக் காரணம் கொண்டும் பிடி பீரியட்களை தவிர்க்கக் கூடாது. அதற்கு மாறாக விளையாட்டுகளில் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

    Advertisement

    விளையாட்டில் பாகுபாடு கூடாது

    1 முதல் 10 ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 உடற்கல்வி வகுப்புகளும், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாள்கள் உடற்கல்வி வகுப்புகளும் கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் விளையாட்டில் கூட சாதி, மதம், உயரம், குட்டை என எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது.

    தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு வாரத்தில் 4 பீரியட்களும் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு கூடுதலாக ஒரு பீரியடும் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 90 நிமிடங்கள் ஒரு பீரியட், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் ஒரு பீரியட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    Advertisement

    ஆசிரியர்களுக்கு மறுவாய்ப்பு

    தமிழ்நாடு அளவில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பிரசென்டேஷன் காண்பிக்கப்பட்டது. இந்த கல்வி அலுவலர்கள் வாயிலாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாடத் திட்டத்தில் மாற்றி அமைக்க வேண்டியவை, பள்ளிக்கூடத்தை மாற்றுவது, பள்ளிக் கூடத்திற்கான அடிப்படை வசதிகள் என மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து மேம்பாடுகளும் உறுதி செய்வதற்கான கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உடற்கல்விக்கான பாடப்புத்தகம் குறித்த கேள்விக்கு, ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். டெட் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மறுவாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும். என்று கூறினார்.

    English Summary

    PT Period: Tamil Nadu Education Minister Rajmohan has announced a revised school timetable prioritising physical education, with three compulsory sports periods a week for Classes 1–10 and two for Classes 11–12, while additional activity periods can also be used for physical education.