சென்னை: தமிழக சட்டசபையை மிகவும் சிறப்பாக நடத்துகிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் என முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டுத் தெரிவித்தார். தனது தந்தை நடத்திய பேரவையை விட தற்போது ஜேசிடி பிரபாகர் அவையை நடத்துவது மிகவும் சிரமமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றன. அவரது குடும்பத்தினரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
அப்போது அவருடைய மகள், மகன் எல்லாம் என்னிடம் வந்து பாசத்துடன் பேசினார்கள். நான் அமைச்சராக இருந்த போது அவர்கள் எனது செயல்பாடுகளை பாராட்டினார்கள். உடனே நான் சொன்னேன், அதெல்லாம் இருக்கட்டும், எனக்கு தெரிந்து ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக சிறப்பாக செயல்படுகிறார். எனது தந்தையை சிறந்த பேரவைத் தலைவர் என சொல்வதுண்டு. ஆனால் என் அப்பாவுக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ் இருந்தது. அதாவது அவர் காலத்தில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆளும் கட்சியிலும் நல்ல அனுபவசாலிகளாக இருந்தனர். அதனால் அந்த அவையை நடத்துறது ரொம்ப எளிது. ஆனால் தற்போது எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதிலும் புதியவர்கள் 99 சதவீதம் பேர் இருக்கிறார்கள். எனவே என் அப்பா நடத்திய அவையை விட ஜேசிடி பிரபாகர் நடத்தும் அவையை நடத்துவது மிகவும் கடினம். இத்தனை இக்கட்டான சூழலிலும் அவையை சிறப்பாக நடத்துகிறார், எனக்கு ஜேசிடி பிரபாகருடன் எந்த பழக்கமும் இல்லை. அவரை நான் பார்த்தது கிடையாது. அவரது செயல்பாடுகளும் எனக்கு தெரியாது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் பார்த்திருக்கிறேன், ஜேசிடி மிகவும் சூப்பராக செயல்படுகிறார். வரலாற்றில் ஜேசிடி பிரபாகருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுத்தே ஆக வேண்டும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். உண்மையில் திமுகவினர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை கொண்டாடி வருகிறார்கள். சட்டசபை சபாநாயகரான ஜேசிடி பிரபாகர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. எம்ஜிஆருடன் பயணித்த போது "எனக்கு ஒரு பெண் பிள்ளை இருந்திருந்தால் அவரை பிரபாகருக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பேன்" என சொன்னாராம் எம்ஜிஆர். அது போல் தமாகா தலைவர் மூப்பனாருடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். இதுநாள் வரை ஊழல் வழக்குகளில் சிக்காதவர். கிளீன் இமேஜ் கொண்டிருக்கிறார். இதனால் இவரை சபாநாயகராக தேர்வு செய்தது ஆளும் கட்சியின் நல்ல ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது. சட்டசபையில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் துணை முதல்வர், பல முறை எம்எல்ஏவானவர்கள் என இருந்தாலும் ஆளும் கட்சியில் பல புதியவர்கள் உள்ளனர். அமைச்சரவையில் கூட செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் எல்லாம் புதியவர்கள்தான். புதியவர்கள் எனும் போது சட்டசபை மரபு தெரியாமல் அவர்கள் பேசும் போது அதை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் ஜேசிடி இருக்கிறார். அதாவது புதியவர்களும் அனுபவசாலிகளும் நிரம்பியுள்ள சபையை மிக அற்புதமாக கையாண்டு வருகிறார் ஜேசிடி. எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கும் போது நிதானமாக பேசி அவர்களை சமாதானப்படுத்தும் அதே சபாநாயகர், ஆளும் கட்சியினர்தானே பேசட்டும் என வேடிக்கை பார்ப்பதில்லை. அவர்களுக்கு கடிவாளம் போட்டு, அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் கண்டிக்கிறார். எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சியினர் தேவையில்லாமல் தாக்கி பேசினால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார். இதுவரை ஆளும்கட்சியில் முதல்வர் விஜய், செங்கோட்டையனை தவிர ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ் உள்ளிட்டோர் பேச்சுக்கு பல முறை சபாநாயகர் தடை விதித்து கண்டித்துள்ளார்.