வெள்ளி திரைக்கு வரும் இந்தியாவின் ‘எடிசன்’ ஜி.டி. நாயுடு வாழ்க்கை! மாதவன் நடிப்பில் உருவாகும் G.D.N

  • கோவை: "அறிவு என்பது நிகழ் கால தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் போதுதான் அதற்கு உண்மையான மதிப்பு கிடைக்கும்" - இந்த எண்ணத்தோடு கடைசி வரை வாழ்ந்தவர் ஜி.டி. நாயுடு. இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படும் அவரது வாழ்க்கைக் கதை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டம் கலங்கலில் 1893ஆம் ஆண்டு பிறந்த கோபாலசாமி துரைசாமி நாயுடு, பெரியளவில் கல்வி கற்கவில்லை. ஆனாலும், தனது ஆர்வம் மற்றும் விடாமுயற்சியால் இந்திய தொழில்துறை வரலாற்றில் தனி முத்திரை பதித்தார். இயந்திரங்களை பிரித்து ஆராய்வது, மீண்டும் அதை சேர்த்து இயக்குவது, அதனை மேலும் மேம்படுத்துவது போன்றவற்றில் சிறு வயதிலிருந்தே அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

    Advertisement

    போக்குவரத்து முதல் தொழில்நுட்பம் வரை

    ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்பு ஆர்வம் வெறும் ஆய்வகங்களுக்குள் இருந்துவிடவில்லை.. அது மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது. அவரது யுனிவர்சல் மோட்டர் சர்வீஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நேர்த்தியான சேவை, பயணிகள் வசதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மையமாக கொண்டு போக்குவரத்து சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

    அதேபோல் மின்மோட்டார்கள், இயந்திர கருவிகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார். பொறியியல், விவசாயம், உற்பத்தி, தொழில்நுட்ப கல்வி என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கியவர் ஜி.டி. நாயுடு.

    Advertisement

    மேக் இன் இந்தியா

    வெளிநாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பாமல், இந்தியா தன்னுடைய சொந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்தி திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தவர் ஜிடி நாயுடு.! ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து தொழில்நுட்ப முன்னேற்றங்களை நேரில் கற்றுக்கொண்டு, அவற்றை இந்திய தொழில்துறைக்கு ஏற்ற வகையில் மாற்ற முயன்றார்.

    இன்றைய காலகட்டத்தில் நாம் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் கலாச்சாரம் குறித்து பேசுகிறோம். இந்த காலத்தில் கூட, ஜி.டி. நாயுடுவின் சிந்தனைகள் மிகவும் பொருத்தமானதாகவே உள்ளன.

    Advertisement

    மாதவன் நடிப்பில் 'G.D.N'

    இந்த அசாதாரண வாழ்க்கைப் பயணத்தையே மையமாகக் கொண்டு தற்போது 'G.D.N' என்ற திரைப்படம் உருவாகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட Rocketry: The Nambi Effect படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற நடிகர் ஆர். மாதவன், இந்தப் படத்தில் ஜி.டி. நாயுடுவாக நடிக்கிறார்.

    இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். ட்ரைகலர் ப்ளிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

    Advertisement

    G.D.N

    G.D.N திரைப்படம் அவரது சாதனைகளை மட்டுமே பதிவு செய்யாது. கோவையை இந்தியாவின் முக்கிய தொழில்துறை நகரங்களில் ஒன்றாக உருவாக்க உதவிய ஒரு தொலைநோக்கு சிந்தனையாளரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் காண்பிக்கும்.

    புதுமை, உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் இந்தியர்களின் திறமையில் கொண்ட நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய ஜி.டி. நாயுடுவின் கதை, இன்றைய இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா சர்வதேச மையமாக உருவெடுத்து வரும் இந்த காலகட்டத்தில், "பெரிய சிந்தனைகள் இந்த மண்ணில் எப்போதுமே இருந்துள்ளன.. அவற்றை நினைவுபடுத்தினால் போதும்" என்ற செய்தியை ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

    English Summary

    R. Madhavan will portray legendary inventor and industrialist G.D. Naidu in G.D.N(மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ஜிடி நாயுடு திரைப்படம்): Biographical film directed by Krishnakumar Ramakumar G D Naidu.