பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்?

  • சென்னை: நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரசிகர்களிடமே நேரடியாக அனுமதி கேட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் ராகவா லாரன்ஸ் விரைவில் இணையலாம் என்ற தகவல் அரசியல் களத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள ராகவா லாரன்ஸ், சமூக சேவைகள் மூலமும் பலரது கவனத்தை ஈர்த்தவர். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படும் அவர், ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அவருடன் இணைந்து பணியாற்றியிருப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது.

    Advertisement

    ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகியதால், லாரன்ஸின் அரசியல் பயணமும் தொடங்காமல் இருந்தது. அதன்பிறகு பலமுறை அவரது அரசியல் வருகை குறித்து தகவல்கள் வெளியானாலும், அவர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

    திருச்சி இடைத்தேர்தல்

    இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விளக்கம் அளித்திருந்தார். அப்போது, "நான் அரசியல் தொடர்பான ஒரு முக்கிய முடிவை விரைவில் அறிவிக்கப் போகிறேன். தாயாரின் ஆசீர்வாதத்துடன் அந்த முடிவை அறிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார். பின்னர் இயக்குநர் பாரதிராஜா மறைவு காரணமாக தனது அறிவிப்பை ஒத்திவைத்திருந்தார்.

    Advertisement

    ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது அரசியல் சிந்தனைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், பின்னர் அவர் அந்த முடிவில் இருந்து விலகியபோது வேதனையடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சில அரசியல் விமர்சனங்களே தனது வாழ்க்கையில் அரசியல் குறித்த சிந்தனையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய்

    அதேநேரத்தில், நடிகர் விஜய்யுடன் தனக்கு நீண்டகால நட்பு இருப்பதாகவும், விஜய்க்காக பல திரைப்படங்களில் பணியாற்றியிருப்பதாகவும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். "விஜய் ஒரு முடிவு எடுத்தால் அதை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவர் அரசியலுக்கு வந்தபோது எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு உருவானது" என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தனது தாயாரிடம் விஜய்யுடன் அரசியலில் இணையலாமா என்று கேட்டதாகவும், ஆரம்பத்தில் அதற்கு அவர் தயக்கம் காட்டியதாகவும் கூறியுள்ளார்.

    Advertisement

    அரசியல் என்ட்ரி

    ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை பார்த்த பின்னர், தனது தாயார் அரசியலுக்கு செல்ல அனுமதி அளித்ததாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர்தான் ரசிகர்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். "எனக்கு தாய்க்கு நிகரானவர்கள் ரசிகர்கள். நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பதை நீங்கள் சொல்லுங்கள். உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்" என்று அவர் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம்

    இதற்கிடையே, ராகவா லாரன்ஸ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தவெக தலைமையுடன் அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் விஜய்யுடன் அவருக்கு இருக்கும் நெருக்கம், சமீபத்திய அரசியல் கருத்துகள் மற்றும் ரசிகர்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கை ஆகியவை இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளன.

    Advertisement

    அடுத்த வாரம் பதில்?

    அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது, ரசிகர்களின் ஆதரவை வெளிப்படையாக பெற்ற பிறகு ராகவா லாரன்ஸ் தனது அரசியல் முடிவை அறிவிக்கலாம் என்றும், அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ராகவா லாரன்ஸ் அல்லது தவெக தலைமையிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே அவர் உண்மையில் அரசியலுக்கு வருகிறாரா?, தவெகவில் இணையப் போகிறாரா? என்ற கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கிடைக்கும் என்கின்றனர்.

    English Summary

    Raghava Lawrence seeks fans’ opinion on politics, fuelling speculation about a possible entry into TVK.