திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை.. நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

  • சென்னை: தவெக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று கூறிய ராகவா லாரன்ஸ், வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சில வாரங்களுக்கு முன்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்று மக்களிடம் கேட்டார். இதன்பின் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்த ராகவா லாரன்ஸ், விரைவில் எந்தக் கட்சியில் இணைகிறேன் என்ற அறிவிப்பை வெளியிடுவேன் என்று அறிவித்தார். இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸை தவெக களமிறக்கப் போவதாக தகவல் வெளியானது.

    Advertisement

    அதற்கேற்ப ராகவா லாரன்ஸும் முதல்வர் விஜய்யை உயர்த்தி பெருமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராகவா லாரன்ஸ் பேசுகையில், அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பின் பலரும், வாங்க எம்எல்ஏ சார் என்றே அழைக்கிறார்கள். ஆனால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது தர்மமா?

    இல்லை விஜய் சாருக்காக இத்தனை ஆண்டுகளாக களத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் போட்டியிடுவது தர்மமா? ஒரு கட்சியில் இணைந்த உடன் எம்எல்ஏ சீட் கேட்க கூடாது. முதலில் ஒரு கட்சி உறுப்பினராக வேண்டும். அதன்பின் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். பின் கட்சித் தலைமையே நன்றாக வேலை செய்கிறார் என்று பொறுப்பு கொடுக்கும்.

    Advertisement

    நடிகராக இருந்த போது விஜய் ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார். இப்போது முதல்வராக இருக்கும் போது எத்தனையோ குழந்தைகளுக்கு உதவி செய்ய முடியும். நிச்சயமாக உரிமையாக சென்று குழந்தைகளுக்காக உதவி கேட்பேன். கலைஞர், உதயநிதி ஸ்டாலின், அன்புமணி என்று பலரும் என்னுடைய கோரிக்கைக்காக உதவி செய்திருக்கிறார்கள்.

    இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது தர்மமாக இருக்காது. திருச்சி கிழக்கில் தான் போட்டியிட மாட்டேன் என்றேன். அதற்காக மற்ற தொகுதிகளில் போட்டியிட மாட்டேன் என்றில்லை. இன்னும் 2 படங்களின் படப்பிடிப்பு இருக்கிறது. அதனை முடித்துவிட்டு விரைவில் எந்த அரசியல் கட்சியில் இணைகிறேன் என்பதை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Raghava Lawrence: Raghava Lawrence Rules Out Trichy East By-Poll Debut, But Keeps Doors Open for Other Constituencies