சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற 'மாணவர்களின் குரல்' (Chhatron Ki Goonj) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை தந்தார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்பு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமிழக முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு ராகுல் காந்தி நேரில் சென்றார்.
அங்கு வந்த ராகுல் காந்தியை முதல்வர் விஜய் இன்முகத்துடன் வரவேற்று, தனது இல்லத்தில் பிரத்யேக மதிய விருந்தளித்து உபசரித்தார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் தனியாக அமர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். வெளிப்படையாக இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகக் கூறப்பட்டாலும், மூடிய அறைக்குள் அவர்கள் பேசிய அரசியல் விவகாரங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சந்திப்பின் தொடக்கத்தில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்கள் குறித்து ராகுலிடம் முதல்வர் விஜய் விரிவாகக் கேட்டறிந்துள்ளார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "பாஜக எப்போதுமே சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதிலேயே தீவிரமாக செயல்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. ஒரு ஜனநாயக நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு இருக்கும் ஒரே பலமான ஆயுதம் அவர்களின் வாக்குரிமைதான். அந்த வாக்குரிமையையே தேர்தல் ஆணையத்தின் துணையோடு மத்திய பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது" என்று ஆவேசமாக விளக்கியுள்ளார். மேலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் கள நிலவரத்தை விவரித்த ராகுல் காந்தி, "இந்த போராட்டத்தில் இளம் பெண்கள்தான் மிகத் துணிச்சலாக முன்னணியில் நின்று களமாடினார்கள். காவல்துறையின் கடும் கெடுபிடிகளையும் தடியடிகளையும் எதிர்கொண்டு நின்ற அந்தப் பெண்கள் அனைவரும் நிஜமான பெண் போராளிகளாகவே எனக்குத் தெரிந்தார்கள்" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தேசிய அரசியல் சூழல் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "பாஜகவை தேசிய அளவில் வீழ்த்த நாம் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். எனவே, 'இந்தியா' கூட்டணியில் நீங்கள் அதிகாரப்பூர்வமாக இணைய வேண்டும்" என்ற நேரடி அழைப்பை முதல்வர் விஜய்யிடம் வைத்தார். இந்த அழைப்பை உடனே ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்யாத முதல்வர் விஜய், மிகவும் சாதுரியமாகப் பதிலளித்துள்ளார். "இது மிக முக்கியமான முடிவு. எனவே, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழுவினருடன் விரிவாக ஆலோசித்துவிட்டு இதுகுறித்து எனது முடிவை தெரிவிக்கிறேன்" என்று பட்டும் படாமலும் கூறி அந்தப் பேச்சை நகர்த்தியுள்ளார். தொடர்ந்து ராகுல் காந்தி, "இன்று மாலை தீவுத்திடலில் நடக்கும் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் என்னுடன் நீங்களும் ஒரே மேடையில் கலந்துகொண்டால் அது மிகச் சிறப்பாக இருக்கும். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" என்று விஜய்க்கு அன்பான அழைப்பு விடுத்தார். அதற்கு முதல்வர் விஜய், "உங்களோடு ஒரே மேடையில் தோன்றி மாணவர்களைச் சந்திக்க எனக்கும் மிகுந்த விருப்பம்தான். ஆனால், நாம் இருவரும் ஒன்றாக அமர்ந்தால், மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கேள்விகளை மாணவர்கள் மாநில முதல்வரான என்னிடமும் கேட்கத் தொடங்குவார்கள். அது உங்கள் மாணவர் சந்திப்பின் முக்கிய நோக்கத்தையே திசைதிருப்பிவிடும். உங்கள் நிகழ்ச்சியின் முழு கவனமும் உங்கள் மீதே இருக்க வேண்டும். எனவே, அடுத்த முறை நீங்கள் சென்னைக்கு வரும்போது கண்டிப்பாக உங்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்கிறேன்" என்று மிகத் தெளிவான காரணத்தைக் கூறி மறுத்துள்ளார். அரசியல் நிலவரங்களைத் தொடர்ந்து ஆட்சியின் செயல்பாடு குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி விஜய்யிடம் வெளிப்படையாகக் கேட்டறிந்தார். அதற்கு முதல்வர் விஜய், "அமைச்சர்களின் பணி பரவாயில்லை, திருப்திகரமாகவே செல்கிறது. இருப்பினும், துறை ரீதியாக அவர்களின் செயல்பாடு மற்றும் செயல்திறன் குறித்த விரிவான ரகசிய அறிக்கை ஒன்றை விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மதிய உணவை முடித்துக்கொண்டு, நீலாங்கரையில் இருந்து இருவரும் பாலவாக்கம் வரை ஒன்றாகச் சென்று அங்குள்ள கஃபே ஒன்றில் காபி அருந்தியபடி நட்பு ரீதியான உரையாடலைத் தொடர்ந்தனர். இந்த 30 நிமிட சந்திப்பு தமிழக மற்றும் தேசிய அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. - சிறப்பு நிருபர் எழில்டெல்லி போராட்டம் குறித்து கேட்டறிந்த முதல்வர்
"இந்தியா கூட்டணிக்கு வாருங்கள்": ராகுலின் அழைப்பும் விஜய்யின் பதிலும்
மொத்த டெல்லியும் களேபரம்! CJP அங்க கலக்கிட்டு இருக்கு.. ராகுல் இங்க என்ன பண்றாரு?
ஒரே மேடையில் சந்திப்பதா? முதல்வர் விஜய் சொன்ன விளக்கம்
மெட்ரோவில் இவங்க எல்லாம் கூட இருந்தா நல்லா இருக்கும்.. விஜய் வைத்த கோரிக்கை.. நோ சொன்ன மோடி!
காங்கிரஸ் அமைச்சர்களின் செயல்பாடு: ராகுலின் கேள்விக்கு விஜய் சொன்ன ரிப்போர்ட்