சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி வருகை தருகிறார்.
இருப்பினும், இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வை விட, தமிழக முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையேயான சாத்தியமான சந்திப்பு தான் தற்போது அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியலில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையில், புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கி 2 அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில் ராகுல் காந்தி நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேடையில் உரையாற்றிய முதல்வர் விஜய், ராகுல் காந்தியை தனது சகோதரர் எனக் குறிப்பிட்டு தேசிய அரசியலில் இருவருக்கும் இடையேயான புதிய பிணைப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்வர் விஜய், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமல் திரும்பினார். தொடர்ந்து, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தவெக சார்பில் மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியானது. இதன் மூலம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் தவெக - காங்கிரஸ் உறவு மேலும் வலுவடைந்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது சென்னையில் நடைபெறவுள்ள சந்திப்பில், இரு தலைவர்களும் தேசிய அளவிலான அரசியல் கூட்டணிக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தவெக - காங்கிரஸ் இணைந்த இந்த அமைப்பிற்கு ஒரு அதிகாரப்பூர்வ கூட்டணியின் பெயரை அறிவிக்குமாறு ராகுல் காந்தி, விஜய் அவர்களிடம் கேட்டுக்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தவெக வட்டாரங்களிலும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களிலும் தீவிரமாக உலா வருகிறது. அதேபோல் இந்தியா கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படலாம். வரும் 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, தென் மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தமிழகத்தில் தனது புதிய அரசின் நிலையை வலுப்படுத்தவும் இந்த ராகுல் - விஜய் கூட்டணி மிக முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. சென்னையில் ராகுல் காந்தி பங்கேற்கும் பயிற்சி முகாம் ஒருபுறம் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினாலும், முதல்வர் விஜய்யுடனான கூட்டம் உறுதியானால், அது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும். தவெக அரசின் கொள்கை முடிவுகள், மாநில உரிமைகள் மற்றும் மத்திய அரசுடனான மோதல் போக்கில் காங்கிரஸின் ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் ராகுல் காந்தியின் வருகை, வெறும் கட்சி நிகழ்ச்சியாக மட்டும் அமையாமல், தமிழகத்தின் வருங்கால அரசியல் கூட்டணிக்கான புதிய அடையாளத்தை உருவாக்கும் களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2 மாதங்களில் உருவான புதிய அரசியல் கூட்டணி
கூட்டணிக்கு பெயர் சூட்டப்படுகிறதா?
மேலிட ஆலோசனைகளும் எதிர்பார்ப்புகளும்