விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்!

  • சென்னை: தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்று முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணமும், அதில் நடைபெறாமல் போன ராகுல் காந்தி உடனான சந்திப்பும் தான். அரசியல் ரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதன் பின்னணி என்ன என்ற கேள்வி இருதரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி, விஜய் மீது அதிருப்தியில் உள்ளார் என்கின்றன டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் முழுவதும் தலைகீழாக மாறிவிட்டது. இருபெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைத்திருந்தாலும், தமிழக அரசியலின் மையப்புள்ளியாக விஜய் மாறியுள்ளார்.

    Advertisement

    இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்கும் தவெகவுக்கும் இடையே நல்ல உறவு உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. குறிப்பாக, கரூரில் நடந்த சோக சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விஜய்க்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய தேசிய தலைவர்களில் முக்கியமானவர் ராகுல் காந்தி.

    ராகுல் காந்தி

    அதன்பிறகு, தேர்தல் முடிவுகள் வெளியாகியதும் திமுக கூட்டணியில் இருந்து முதலில் விலகியது காங்கிரஸ்தான். இதுவும் அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக, விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி முக்கிய விருந்தினராக பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் ராகுலுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற ஒரு அதிருப்தி காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

    Advertisement

    விஜய் டெல்லி பயணம்

    இருப்பினும், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பிடித்திருந்த உற்சாகம் காரணமாக அந்த விவகாரம் பெரிதாக வெளியே வரவில்லை. இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக விஜய் டெல்லி சென்றது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்த விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.

    சந்திப்பு ரத்து

    ஆனால், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. கிறிஸ்டோபர் திலக் விளக்கம் அளித்தார். கர்நாடக காங்கிரஸ் விவகாரம், ஜார்கண்ட் மாநிலங்களவை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ராகுல் காந்தி பிஸியாக இருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை என்று அவர் கூறினார். ஆனால், அரசியல் வட்டாரங்களில் இதற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

    Advertisement

    எம்எல்ஏ வேட்டை

    குறிப்பாக, அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை தவெக தொடர்ந்து தன் பக்கம் இழுத்து வருவது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கூட்டணி ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் தவெக, அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, பின்னர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நோக்கி நகர நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளிடையே உள்ளது.

    அரசியல் பேரம்

    இது காங்கிரஸுக்கும் அரசியல் ரீதியாக கவலையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், தவெக தனியாக 118 என்ற மேஜிக் எண்ணை எட்டிவிட்டால், கூட்டணிக் கட்சிகளின் அவசியம் குறைந்து விடும். அப்படியான சூழல் வந்துவிட்டால் காங்கிரஸின் அரசியல் பேரம் பேசும் சக்தியும் குறையும் என்பதால், தவெகவின் இந்த நகர்வு காங்கிரஸின் ராகுல் காந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    வெல்லமண்டி நடராஜன்

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. அதேபோல், காலியாக உள்ள தொகுதிகளில் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே தவெக சீட் வழங்கலாம் என்ற தகவலும் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    காவிரி மேகதாது விவகாரம்

    இன்னொரு முக்கிய காரணமாக காவிரி மற்றும் மேகதாது விவகாரமும் பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி மேகதாது அணை திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமரிடம் விஜய் நேரடியாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    இதனால், தமிழக காங்கிரஸ் மற்றும் கர்நாடக காங்கிரஸ் இடையே சிக்கலான அரசியல் நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    விஜய் - ராகுல் சந்திப்பு

    தமிழகத்தில் காங்கிரஸ் காவிரி உரிமைக்காக பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேநேரத்தில் கர்நாடக காங்கிரஸ் மேகதாது திட்டத்தை விட விரும்பவில்லை. இந்த முரண்பாடும் விஜய் - ராகுல் சந்திப்பில் ஒரு அசௌகரியத்தை உருவாக்கியிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, டெல்லியில் பிரதமருடனான விஜயின் சந்திப்பு வெறும் 10 நிமிடங்களே நீடித்தது, அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் திரும்பிவிட்டது, ராகுல் காந்தி சந்திப்பு ரத்து ஆனது என அனைத்தும் சேர்ந்து பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    கூட்டணி அரசியல்

    ஒருபுறம் மத்திய அரசுடனும் நல்லுறவு, மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடனும் சமாதானம் என்ற கணக்கில் விஜய் செயல்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரத்தில், தவெக வேகமாக வளர்ந்து வரும் சூழலில் காங்கிரஸ் தன்னுடைய அரசியல் அடையாளத்தை இழக்கக் கூடாது என்பதற்காக எச்சரிக்கையாக இருக்கிறது. ராகுல் - விஜய் சந்திப்பு ஏன் ரத்து? என்ற கேள்விக்கு வேறு காரணம் என சொல்லப்பட்டாலும், அதன் பின்னால் கூட்டணி அரசியல், அதிமுகவின் எம்எல்ஏ வேட்டை, காவிரி - மேகதாது பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாகவே தற்போது பேசப்படுகிறது.

    English Summary

    Rahul Gandhi’s cancelled meeting with Vijay fuels speculation over TVK’s MLA moves and alliance politics.