மு.க.ஸ்டாலினுக்கு.. ராகுல் காந்தி அழைப்பு! நமது நோக்கம் இதுதான்.. இணைந்து போராட வலியுறுத்தல்!

  • சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமாகிய ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, அரசியலமைப்பை காக்க இணைந்து போராடுவோம் என்று மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து தனது x பக்கத்தில், "மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. 'இந்தியா' எனும் கோட்பாடு, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் காப்பதில் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாடு தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போராட்டம். வெற்றி பெறும் வரை நாம் இதனை ஒன்றிணைந்து முன்னெடுப்போம்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    காங்கிரஸ் திமுக பஞ்சாயத்து

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, திமுக-காங்கிரஸ் இடையே மோதல் போக்கு எழுந்தது. தேர்தலுக்கு முன்பு இருந்தே, இரு கட்சிகளுக்கு இடையே உரசல்கள் இருந்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை முன்வைத்தது. மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே இதை பேசியிருந்தனர்.

    காங்கிரஸ்-திமுக உரசல்கள்

    ஆனால், திமுக இதை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. காரணம், திராவிட கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல், அதிகாரத்தில் பங்கு கொடுத்தது கிடையாது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நாங்கள் அதிகாரத்தில் பங்கு தர மாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லிவிட்ட நிலையில் கூட, காங்கிரஸ் இந்த கோரிக்கையை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தது. இப்படித்தான் மோதல் போக்கு தொடர்ந்தது.

    Advertisement

    தொகுதி பங்கீடு

    இருப்பினும் தேர்தலை எதிர்கொண்டபோது, திமுக தனது கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு கொடுத்த இடங்களை விட கூடுதல் இடங்களை காங்கிரஸுக்கு கொடுத்தது. அதேபோல, மாநிலங்களவையில் ஒரு இடத்தையும் கொடுத்தது. தேர்தலுக்கு பின்னர் இன்னொரு இடத்தை கொடுப்பதாகவும் சொன்னது.

    தவெகவுக்கு தாவிய காங்கிரஸ்

    இதெல்லாம் வாங்கிக்கொண்டு தேர்தல் ரிசல்ட் வந்தவுடன், தவெகவுக்கு ஆதரவு தேவை என்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து தாவி விட்டது காங்கிரஸ். திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் கூட தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. ஆனால், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும்போது முறைப்படி அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி பின்னர் வெளியேறினர்.

    Advertisement

    காங்கிரஸ் மீது அதிருப்தி

    ஆனால், திமுக தலைவர்களை காங்கிரஸ் பெயருக்கு கூட சந்திக்கவில்லை. இதனால்தான் திமுக கடும் அதிருப்தியடைந்தது. 20 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்துவிட்டு போகும்போது.. ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லையே! என்று மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ்-திமுக இடையே கடும் மோதல் போக்கு வெடித்தது.

    இந்தியா கூட்டணியில் விரிசல்

    இந்த மோதல் காரணமாக, டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. மட்டுமல்லாது, காங்கிரஸ் மீது இடதுசாரிகள், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்கள் சொன்ன விமர்சனங்களை பேனர்களாக அச்சடித்து, அதை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கும் பகுதியில் வைத்து தனது எதிர்ப்பை திமுக வெளிப்படுத்தியிருந்தது.

    Advertisement

    பேட்ச் அப்

    இப்படி இருக்கையில், நேற்று நடந்த செல்வப்பெருந்தகை மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இது காங்கிரஸ் உடனான மோதல் போக்கை சமாதானம் செய்வதை போல தெரிந்தது. அதேபோல இன்று, ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு ரிப்ளை கொடுத்த ராகுல் காந்தி, இணைந்து போராட அழைப்பு விடுத்திருக்கிறார்.

    ராகுலுக்குதான் சிக்கல்

    நாடாளுமன்றத்தில் திமுக 5வது பெரிய கட்சியாக இருக்கிறது. இந்த கட்சியை விட்டுவிட்டால் இந்தியா கூட்டணி பலவீனமடையும். மட்டுமல்லாது, திமுக விஷயத்தில் காங்கிரஸ் நடந்துக்கொண்ட முறை சரியில்லை என்று கேரள இடதுசாரி தலைவர்கள் கூட ராகுல் காந்தியை டெல்லி கூட்டத்தில் வைத்து விமர்சித்திருந்தனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான், திமுகவை மீண்டும் ராகுல் காந்தி அழைத்திருக்கிறார்.

    English Summary

    Rahul Gandhi Urges MK Stalin: DMK leader M.K. Stalin had extended birthday wishes to Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha and Congress leader. Expressing his gratitude, Rahul Gandhi has called upon M.K. Stalin to join forces in the fight to protect the Constitution.