Rajinikanth: விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கு? செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷன்

  • சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் 100 நாட்கள் ஆகியுள்ளது. விஜய் ஆட்சி குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் முனைத்து வரும் நிலையில், விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினிகாந்த் என்ன பதிலளித்தார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்மன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிராகன், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

    Advertisement

    விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது?

    சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது தனது படவேலைகள் குறித்து ரஜினிகாந்த் பேசினார். ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. தர்மன் படப்பிடிப்பு தற்போது சென்று கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அந்த படத்தை தயாரிக்கிறார். நானும் கமல்ஹாசனும் ரெட் ஜெயிண்ட் தயாரிக்கும் படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளோம்" என்று கூறினார்.

    தொடர்ந்து தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், "தேங்க் யூ.. தேங்க் யூ.." என்று சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    Advertisement

    பதில் அளித்த ரஜினிகாந்த்

    திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் ரஜினிகாந்த், விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்களை விஜய் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டன. அதேபோல, சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் கிளப்பிவிடப்பட்டன.

    இதையடுத்து, போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜய் வெற்றி பெற்ற உடனே எக்ஸ் தளத்தில் என்னுடைய வாழ்த்துக்களை நான் பதிவிட்டு விட்டேன். நான் அரசியலில் இல்லை என்று சொல்லி விலகிவிட்டேன். அரசியலில் இல்லாத பொழுது அவர் மேல் எனக்கு ஏன் பொறாமை. ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராக இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்குமோ? இல்லையோ? தெரியாது. அப்போது கூட பொறாமை வந்திருக்காது" என்று கூறி தனது விளக்கத்தை அளித்து இருந்தார்.

    Advertisement

    100 நாட்களை கடந்த தவெக ஆட்சி

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து களம் இறங்கிய தவெக, 108 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மே 10 ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றார்.

    100 நாள் ஆட்சியை விஜய் அரசு கடந்த போதிலும் தேர்தல் வாக்குறுதிகளை சொன்னபடி நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதேநேரத்தில் ஊழல் ஒழிப்பில் விஜய் தீவிரம் காட்டி வருவதாகவும், விவசாய கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே செய்து காட்டியிருப்பதாகவும் தவெகவினரும் கூறி வருகிறார்கள்.

    English Summary

    Rajinikanth: August 17 marked the completion of 100 days since Vijay assumed office as the Chief Minister of Tamil Nadu. Amidst intensifying criticism from opposition parties regarding his administration, reporters asked actor Rajinikanth for his views on Vijay's 100-day tenure. Let us look at what Rajinikanth had to say in response.