அக்கா ஸ்தானத்தில் பேசிய கீர்த்தனா.. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. அமைச்சர் ராஜ்மோகன்

  • சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளிடம் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் எந்தக் காணொளியையும் எடுக்கவில்லை என்றும், மாணவியிடம் அக்கா ஸ்தானத்தில் பேசியதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறை ஒன்றுக்குள் சென்ற அமைச்சர் அங்குள்ள மாணவர்களிம் பேசினார். அப்போது, அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் அமைச்சர் சில கேள்விகளைக் கேட்டார். ஆங்கில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறினர்.

    Advertisement

    அப்போது அமைச்சர் கீர்த்தனா, முதல் பெஞ்சில் இருக்கும் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள் என்று பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமெரிக்காவில் கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு வகையான உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் பெட்னாவின் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பித்தோம்.

    Advertisement

    எல்லா தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒன்றாக்கி மீண்டுமொரு உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றிகரமாக அமெரிக்க பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாநாட்டைப் பொருத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, உலகத் தலைவர்களை இணைக்கும் வகையிலும், அடுத்த தலைமுறையையும் வாஞ்சையோடு அழைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆலோசனை பணி, ஆராய்ச்சி பணி, களப்பணி ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றார்.

    அப்போது, அமைச்சர் கீர்த்தனா தொடர்பான சர்ச்சை வீடியோ குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், ஆய்வுப் பணி என்பது காலம் காலமாக நடைபெறுவது தான். ஒவ்வொரு அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும், சம்பந்தப்பட்ட அவர்களின் துறைக்கும், பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வது என்பது மரபுதான். சம்பந்தப்பட்ட நிகழ்வு குறித்து நான் விசாரித்தபோது கூட, சம்பந்தப்பட்ட அமைச்சர் இது தொடர்பான காணொளியை எதுவும் எடுக்கவில்லை.

    Advertisement

    காணொளியோ, கேட்பொலியோ அமைச்சர் எடுக்கவில்லை. அவர்களே தமிழ் வழி கல்வியில் படித்த சகோதரி தான். ஒரு மாற்றுத் திறனாளியின் மகளாகப் பிறந்து, தமிழ் கல்வியில் பயின்று இன்று ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்ட ஒரு அரசியல் ஆளுமை தான். அங்கிருந்த மற்றவர்கள் எடுத்த காணொளி தான் தொடர்ச்சியாக சர்ச்சையாக மாறியிருக்கிறது.

    மற்றபடி ஆய்வு என்பது மரபு தான். அதனை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட நிகழ்வில், தன்னைப் போன்ற ஒரு மாணவியைப் பார்த்தால் ஒரு அக்கா ஸ்தானத்தில் தான் அந்த மாணவியிடம் அமைச்சர் பேசியிருக்கிறார். அதனைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

    English Summary

    School Education Minister Rajmohan defended Minister Keerthana over the viral school video, saying she spoke to the student like an elder sister and urged people not to misinterpret the incident.