சென்னை: திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த சமூக ஆர்வலரை துணை சபாநாயகரும் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் தாக்கியது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 78, தானார் தெரு பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, புதிய பள்ளிக் கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டிடப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பள்ளியின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது: துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான புகார் குறித்து விசாரிக்க தவெக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே ரவிசங்கர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம், சரியாக இல்லை என்றும் தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து துணை சபாநாயகரிடமும் அவரது எம்எல்ஏ அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் மணச்சநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு ரவிசங்கர் வந்திருப்பதை அறிந்த கார்த்திக் குமார், அங்கு அவரிடம் தனது தொகுதி பிரச்சனை குறித்து மனு அளிக்க சென்றாராம். அப்போது அவரிடம் என்ன ஏது என கேட்காமலேயே ரவிசங்கர், தகாத வார்த்தைகளால் பேசி அடித்து தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் "நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் விஜய்க்கு ஓட்டு போட்டேன்" என கார்த்திக் குமார் சொல்கிறார், அதற்கு மறுமுனையில் ரவிசங்கரோ, "எந்த ஊர்டா நீ, எந்த ஊர்டா நீ" என தாக்கியபடியே கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வைரல் வீடியோவில் ரவிசங்கர் என சொல்லப்படும் நபரின் முகம் சரியாக தெரியவில்லை என சொல்லப்பட்டது. இதனிடையே காயமடைந்த கார்த்திக் குமார் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்தபடியே அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு ரவிசங்கரும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கெல்லாம் ரவிசங்கருடன் அமர்ந்து கார்த்திக் குமார் வீடியோ போட்டிருந்தார். அந்த வீடியோவில், "கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாங்கள் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பாக இந்த சம்பவம் பரப்பப்படுகிறது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என கார்த்திக்குமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் புது வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் "என்னை உயிருடன் விடமாட்டோம் என ரவிசங்கரும், மணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதியும் மிரட்டியதால்தான் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என வீடியோ வெளியிட்டேன். ஆனால் என் மீது ரவிசங்கர் தாக்கியது உண்மைதான்" என தெரிவித்திருந்தார்.கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு TVK எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் விவகாரம்! ராஜ்மோகன் விளக்கம்