ஆடி மாத கூழ்: இலவசமாக அரிசி, கேழ்வரகு, கம்பு வழங்கவேண்டும்.. தமிழக அரசுக்கு ராம.ரவிக்குமார் கோரிக்கை

  • சென்னை: ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்குவதைப் போல, ஆடி மாத அம்மன் கோவில்களில் நடைபெறும் கூழ்வார்த்தலுக்காக 10,000 மெட்ரிக் டன் கம்பு, கேழ்வரகு, அரிசி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசை இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நடைபெறும் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் முதன்முதலாக 19.11.2001 அன்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2006-2011 காலகட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதன் பிறகு 2012 முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, ஆண்டுதோறும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    அண்மைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட அரிசியின் அளவு:

    - 2026 - 8,700 மெட்ரிக் டன் - ரூ.20.88 கோடி
    - 2025 - 7,920 மெட்ரிக் டன் - ரூ.18.41 கோடி
    - 2024 - 7,040 மெட்ரிக் டன் - ரூ.26.82 கோடி
    - 2023 - 6,500 மெட்ரிக் டன் - ரூ.25.63 கோடி
    - 2022 - 6,000 மெட்ரிக் டன் - ரூ.13.53 கோடி
    - 2021 - 5,500 மெட்ரிக் டன்

    சமூக நலன் மற்றும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கையைப் போலவே, தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு அடையாளமான ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் நடைபெறும் "கூழ்வார்த்தல்" நிகழ்விற்கும் தமிழக அரசு உரிய ஆதரவு வழங்க வேண்டும்.

    Advertisement

    தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், திரௌபதியம்மன், எல்லையம்மன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கம்பு, கேழ்வரகு, சோளம் மற்றும் அரிசியைக் கொண்டு கூழ் தயாரித்து அம்மனுக்கு நிவேதனம் செய்து, பின்னர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானமாக வழங்கும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

    இந்த கூழ்வார்த்தல் நிகழ்வு ஒரு மதச் சடங்கு மட்டுமல்ல; சமூக ஒற்றுமை, அன்னதானம், கிராமிய பண்பாடு, விவசாய மரபு, சிறுதானிய உணவுப் பழக்கம், பொதுச் சுகாதாரம் மற்றும் மனிதநேயத்தின் வெளிப்பாடாகும். இதில் மதம், சாதி, பொருளாதார நிலை என்ற எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    மேலும், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. எனவே, ஆடி மாத கூழ்வார்த்தலுக்காக இச்சிறுதானியங்களை அரசு வழங்குவது, அரசின் சிறுதானிய ஊக்குவிப்புக் கொள்கைகளுடனும் முழுமையாக ஒத்துப்போகிறது.

    அரசியலமைப்புச் சட்ட அடிப்படை

    - பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அரசு வழங்கும் நலத்திட்டங்களில் சமத்துவம் பேணப்பட வேண்டும்.
    - பிரிவு 25 - ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் உரிமை.
    - பிரிவு 26 - சமய நிறுவனங்கள் தங்களது மத வழிபாடுகளை நிர்வகிக்கும் உரிமை.
    - பிரிவு 29 - பண்பாட்டு மரபுகளையும் தனித்துவமான கலாச்சார அடையாளங்களையும் பாதுகாக்கும் உரிமை.

    Advertisement

    தமிழர்களின் பாரம்பரியமான ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்வு பண்பாட்டு மரபின் முக்கிய அங்கமாக இருப்பதால், அதற்கு அரசு ஆதரவு வழங்குவது அரசியலமைப்பின் நோக்கத்திற்கும் சமூக நீதியின் கொள்கைக்கும் ஏற்புடையதாகும்.

    அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்

    1. மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கிராமப்புற அம்மன் கோவில்களில் ஆடி மாத கூழ்வார்த்தல் நடைபெற 10,000 மெட்ரிக் டன் கம்பு, கேழ்வரகு மற்றும் அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
    2. இதற்காக ஆண்டுதோறும் தனி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
    3. இந்தத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
    4. கம்பு மற்றும் கேழ்வரகை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வழங்குவதன் மூலம் சிறுதானிய விவசாயிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    Advertisement

    ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசு பல ஆண்டுகளாக வழங்கி வரும் ஆதரவைப் போலவே, தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு அடையாளமான ஆடி மாத அம்மன் கூழ்வார்த்தல் நிகழ்விற்கும் அரசு உரிய ஆதரவை வழங்குவது சமத்துவம், பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் நியாயமான கோரிக்கையாகும்.

    எனவே, தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆடி மாத அம்மன் கூழ்வார்த்தல் நிகழ்விற்காக 10,000 மெட்ரிக் டன் கம்பு, கேழ்வரகு மற்றும் அரிசியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக இந்து சமுதாயத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Hindu Tamilar Katchi Leader Rama Ravikumar urged the Tamil Nadu government to issue a Government Order allocating 10,000 metric tonnes of pearl millet, finger millet, and rice for the *Koozh Vaarthal* (offering of traditional millet porridge) rituals held at Amman temples during the month of Aadi, similar to the allocation of rice for Ramadan fasting porridge.