Ramadoss: மருத்துவர் டூ தலைவர்.. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி! ராமதாஸின் அரசியல் பயணம்

  • சென்னை: தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் ராமதாஸ். மருத்துவராக இருந்து தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த ராமதாஸ் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக இன்று தனது 88வது பிறந்தநாளில் அறிவித்துள்ளார். ராமதாஸ் அரசியல் பயணம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள கீழ் விசிறி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற ராமதாஸ் சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்.

    Advertisement

    ஈராட்டில் பிரமாண்ட மாநாடு

    வன்னியர் சமுதாயத்தின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார். பின்னர் வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து, வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை 1980-ல் தொடங்கினார். வன்னியர் சமுதாய முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி ஈரோட்டில் 1980 ல் மாநாடு ஒன்றை நடத்தினார்.

    அவர் நடத்திய இந்த மாநாடு, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. கனல்' என்ற இதழைத் தொடங்கி எழுதியும் வந்தார். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வன்னியர் சாதியினருக்கும் மாநிலத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு, மத்தியில் 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீட்டை18 சதவீதத்தில் இருந்து 22 ஆக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு வாரம் தொடர் போராட்டம் நடத்தினார். இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஸ்தம்பித்தன.

    Advertisement

    அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 21 பேர் மரணமடைந்தனர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' என்ற புதிய பட்டியலில் இணைத்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    அதுவரை தேர்தலை சந்திக்காமல் இருந்த வன்னியர் சங்கம் 1989 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 33 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் கட்சி தொடங்கிய சில மாதங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதாவது 6% வாக்கு வங்கியை பெற்று தமிழக அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்தது. அதன் பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பாமக உருவெடுத்தது.

    Advertisement

    தேர்தல்களில் பாமக

    1991 - 1996 லோக்சபா தேர்தல்களிலும் அக்கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது. ஆனாலும் அக்கட்சி படிப்படியாக வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டே வந்தது. தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியலில் உருவெடுத்த பாமக, 1998-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஐந்து இடங்களில் போட்டியிட்ட பாமக நான்கில் வென்றது. ஓராண்டில் மத்தியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால், 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றது. இதில், 8 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வென்றது.

    1999 ஆம் ஆண்டு, மத்தியில் இருந்த பா.ஜ.க ஆட்சி ஜெயலலிதாவால் கவிழ்க்கப்பட்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றது. எட்டு இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்றது. ஏ.கே.மூர்த்தி உள்பட மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றனர். 2004-ல் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வென்றது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்டது.

    Advertisement

    அதன்பிறகு வந்த லோக்சபா தேர்தலில் பாமக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. 2014-ல் அன்புமணி மட்டும் வென்று எம்பி ஆனார். 2019, 2024 தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது.

    சட்டமன்ற தேர்தல்

    1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, பண்ருட்டி தொகுதியில் வென்றது. 1996 ஆம் ஆண்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.. 2001-ல் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்டது. இதில், 20 இடங்களில் வெற்றி பெற்றது. 2006 ஆம் ஆண்டு திமுக பக்கம் தவிய பாமக 34 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கை கோர்த்தது.

    Advertisement

    திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் பாமக 3 இடங்களில் மட்டுமே வென்றது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில், பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில் அனைத்திலும் தோல்வி அடைந்தது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. 23 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட 5ல் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணியிலேயே இருந்த பாமக 5 ல் வென்றது.

    மதுக்கடைகளை மூட போராட்டம்

    தமிழக அரசியலில் வட மாவட்டங்களில் திராவிட கட்சிகளுக்கு ஆட்டம் காண வைத்த அரசியல் சக்தியாக பாமக நிலவியது. பூரண மதுவிலக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு போன்றவற்றில் தொடர்ந்து அக்கறை காட்டிய ராமதாஸ், பல போராட்டங்களையும் நடத்தினர். மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைப்பதிலும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடுவதிலும் பாமக முன்னெடுத்த போராட்டம் முக்கிய பங்காற்றியது.

    விமர்சனங்கள்

    அதே நேரத்தில் அரசியலில் போட்டியிடுவது எங்கள் இலக்கு அல்ல என்று கூறி பின்னர் பாமக என கட்சி ஆரம்பித்து போட்டியிட்டதும், குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் எனக் கூறிவிட்டு மகன் அன்புமணியை கட்சியில் முன்னிறுத்தியதும், சாதி அரசியல், கூட்டணி மாற்றம் என அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்து வந்த ராமதாஸ் இன்று தனது 88வது பிறந்தநாளில் அரசியல் துறவறத்தை அறிவித்துள்ளார்.

    English Summary

    Ramadoss is one of Tamil Nadu's veteran political leaders. Having transitioned from a career as a doctor to become an indispensable figure in the state's politics, Ramadoss has announced his retirement from political life today, on his 88th birthday. Let us take a look at the details of his political journey.