பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ்

  • சென்னை: தமிழகத்தில் குறு விவசாயிகள் பெற்ற ரூ. 50 ஆயிரம் வரையிலான கடன் முழுமையாக ரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சிறு, குறு மட்டுமின்றி பிற விவசாயிகளின் நிலையையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் அரசு விரிவான நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க் கடன்களில், குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

    Advertisement

    மேலும், ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கும் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும். இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகளின் சுமையையும் முழுமையாக குறைக்காது என்றாலும், தற்போதைய பொருளாதார சூழலில் உழவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் முயற்சியாக பார்க்கப்பட வேண்டும்.

    தொடர்ந்து இயற்கை சீற்றங்கள், உற்பத்தி செலவுகள் உயர்வு, விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு விவசாயிகளுக்கு அரசு இன்னும் விரிவான நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதேபோல், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    Advertisement

    பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில், அவர்களுக்கு மீண்டும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் எளிதில் புதிய கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கு எந்தவிதமான நிர்வாக தடைகளும் இருக்க கூடாது. சிறு, குறு விவசாயிகளை தவிர்த்து மீதமுள்ள விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பெற்ற பயிர் கடனை ஓரளவு நிவாரணமாக அளிக்கும் அளவுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அனைத்து விவசாயிகளை பாதுகாப்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் அரசின் முதன்மை பொறுப்பாகும். அதற்கான நல்ல திட்டங்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு பயன் அளிக்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    PMK Ramadoss welcomed the Tamil Nadu government’s decision to waive crop loans up to ₹50,000 for small farmers through cooperative societies. He also urged the government to extend wider relief measures and subsidies to all categories of farmers affected by rising agricultural costs and natural calamities. Ramadoss emphasized that protecting farmers and improving their livelihood must remain the government’s top priority.