திருச்செந்தூர் கோவிலில் எல்லை மீறும் வசூல் வேட்டை.. முதல்வர் விஜய்க்கு பாஜக வைத்த கோரிக்கை

  • திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சாமானிய பக்தர்கள் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் வதங்கும் நிலை இருக்கிறது. இவற்றுடன் அர்ச்சகர்களின் அதீத கட்டண வசூலும், ஊழியர்களின் மனிதாபிமானமற்ற, அநாகரிகமான பொது மக்கள் அணுகுமுறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி சில நபர்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

    Advertisement

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் பணம் வாங்கிக்கொண்டு சிலரை மட்டும் சண்முக விலாச மண்டப இரும்பு கேட் வழியாக அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நேற்று பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த பக்தர்கள் அங்கிருந்த இரும்பு கேட்டை பலவந்தமாக தள்ளிவிட்டு உள்ளே நுழைந்ததால் கோவிலில் பெரும் தள்ளுமுள்ளுவும் பரபரப்பும் ஏற்பட்டது.

    Advertisement

    இது ஒருபுறம் எனில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் தனது மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர்.

    அப்போது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த கோவில் ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை வெளியே தள்ளி, முகத்திற்கு நேரே கேட்டைப் பூட்டினார்களாம். இதனால் அந்த தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினர் கூறுகையில், "திருச்செந்தூர் கோவிலில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் இந்த வி.ஐ.பி. கலாசாரம் மற்றும் கட்டணக் கொள்ளை போன்ற அவலப் பிரச்சினைகளுக்குத் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை எளிய மக்களும், பெண்களும் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும்" என வேண்டுகோள் வைத்தனர்.

    Advertisement

    இதனிடையே பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "வசூல் மயமாகிறதா திருச்செந்தூர்? அமைச்சர் இல்லா துறையில் அரங்கேறும் அட்டூழியங்கள்.. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது. மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் வருகை தரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி சில நபர்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இவர்களின் ஆசை வார்த்தைகளில் சிக்கும் பக்தர்கள் ஒரு நபருக்கு 500 முதல் 1000 வரை கொடுத்து ஏமாந்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை கோவில் நிர்வாகம் அறியவில்லையா அல்லது அறிந்தும் கமிஷன் போய்விடும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

    இதுவரை இந்து சமய அறநிலையத் துறைக்கென்று அமைச்சரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக முதல்வர் விஜய் அவர்களே, விரைவில் துறை அமைச்சரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத் துறையில் கோவில்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுத்து பக்தர்கள் மன நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Rampant Extortion at Tiruchendur Temple: BJP Women's Wing Chief Vanathi Srinivasan Calls for the Appointment of a Minister.