சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள்

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை 'ஆசிரியம்' கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலியைக் கொன்று வணிகர்களைக் காப்பாற்றிய வீரருக்கு வழங்கப்பட்ட பாராட்டு மற்றும் பாதுகாப்பு உதவியை இந்த கல்வெட்டு பதிவு செய்திருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    Advertisement

    சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு சோழபுரம் கண்மாயில் வேறுபட்ட கல் ஒன்று இருப்பதாகத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, செயலர் இரா. நரசிம்மன் அவ்விடத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் பிறகு சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    Advertisement

    சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதி உள்கடையில் குமிழித் தூண் அருகில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது மூன்று அடி உயரமும், 1.1/4 அடி அகலம் உடையதாக உள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் சிறிய அளவில் ஒற்றைக் காலை தூக்கியபடி புலி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டின் நிறைவுப் பகுதியில் வில் அம்பு மற்றும் மங்கலச் சின்னமாக இரண்டு குத்து விளக்குகளும் உள்ளன.

    கல்வெட்டு வரிகள்

    1, ஸ்வஸ்தி ஸ்ரீ
    2, எட்டி எரிய
    3, ன் செயங்
    4, கொண்ட சோழபு
    5, ரம் புலிக்குட்டி
    6, வீரருக்கு ஆசிரி
    7, யம்
    என எழுதப் பெற்றுள்ளது.

    Advertisement

    கல்வெட்டுச் செய்தி

    எட்டி எனும் வணிகர்களுக்கான பட்டத்தை உடைய எரியன் என்பவன் செயங்கொண்ட சோழபுரம் என்னும் இவ்வூரில் புலியைக் கொன்று தம்மை காத்த வீரனுக்கு ஆசிரியம் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் வணிகச் சாத்துகளுடன் வந்த வீரன் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு புலியோடு சண்டையிட்டு புலியைக் கொன்றதோடு தாமும் உயிர் நீத்தும் இருக்கலாம் அவனது வழியினரை பாதுகாக்கவும் இக்கண்மாயினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறது. இன்றும் இக்கண்மாய் எட்டி என்ற பெயரோடு எட்டிச் சேரிக் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது.

    அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு

    பொதுவாக ஆசிரியம் என்பது பாதுகாப்பை குறிக்கும். அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி செய்தல், உணவு அளித்தல், போன்றவைகளையும் உள்ளடக்கியதாகும்.

    Advertisement

    எட்டி எனும் சொல்

    எட்டி என்ற சொல் வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமாக இருந்துள்ளது. எட்டி என்னும் சொல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. எட்டி என்ற சொல்லே இன்றைய செட்டி என்னும் சொல்லாக மாறி இருக்கலாம் என்பதும் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.

    செயங்கொண்ட சோழபுரம்

    இவ்வூரில் உள்ள பழமையான மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் இவ்வூர் முடிகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கல்வெட்டில் செயங்கொண்ட சோழபுரம் என்று அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

    கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இவ்வாறான அரியவகை ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. மேலும் இது சிவகங்கை தொல்நடைக்குழு அடையாளப்படுத்தும் ஆசிரியம் வகையைச் சார்ந்த மூன்றாவது கல்வெட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Sivaganga: Researchers in Sivaganga have discovered a rare 13th-century inscription at Cholapuram. The inscription records an “Aasiriyam” granted to a hero who killed a tiger while protecting traders, offering valuable insights into medieval trade, bravery and social support systems.