சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடியாக பயன்படும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை eKYC செய்யாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் இந்த முகாமில் யாரெல்லாம் பங்கேற்கலாம், என்ன செய்ய வேண்டும்?என்பதை பற்றின அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) என்பது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல், முன்னுரிமை குடும்ப அட்டைகளும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களை உள்ளடக்கியவை. இந்த குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் விரல் ரேகை அடிப்படையிலான eKYC மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெறும்போது பயோமெட்ரிக் சரிபார்ப்பில் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும். இதுவரை eKYC செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், நடைபெறவுள்ள சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது eKYC பதிவை மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டில் இந்த eKYC பணியை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில், வரும் செப்டம்பர் 19-ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் என்ன என்பதை பார்க்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சிறப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிவிப்பில், "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு வரும் 19.09.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே இன்று வரை நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வரும் 19.09.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு இருக்கா
செப்டம்பர் 19-ம் தேதி முகாம்
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள்