அதிமுக தொண்டர்களிடம் பிச்சை கேட்கிறீர்களா? ஆதவ் அர்ஜுனா மீது ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு

  • சென்னை: "உங்கள் கட்சி மற்றும் தலைவர் மீது நம்பிக்கை இல்லாததால் தானா அ.தி.மு.க. தொண்டர்களை கூவி கூவி அழைக்கிறீர்களா?" என்றும், உங்கள் கட்சி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதா என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அ.தி.மு.க. நிர்வாகிகள் த.வெ.க.வில் இணையலாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். "அ.தி.மு.க. தொண்டர்களை ஒருபோதும் விலை பேச முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனா பேச்சு

    தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க.வில் இருந்து சிலர் த.வெ.க.க்கு ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் ஆதரவுடன் புதிய அணி உருவானதாக கூறப்பட்டது.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அணி த.வெ.க.க்கு எதிராக வாக்களித்த நிலையில், மற்றொரு அணி ஆதரவாக வாக்களித்ததாக தகவல்கள் வெளியானது. மேலும், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    ஆர் பி உதயகுமார் கடும் விமர்சனம்

    இதே போன்று சிவி சண்முகம் மற்றும் சி விஜயபாஸ்கர் இருவரும் அடுத்த நாட்களில் தவெகவில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், "90 சதவீத அ.தி.மு.க.வினர் த.வெ.க.வில் இணைவார்கள்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று கூறியிருந்தார். அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், "பல கட்சிகளில் இருந்து தாவி வந்த ஒருவர், அ.தி.மு.க. தொண்டர்களை பற்றி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:- கோடிக்கணக்கான தொண்டர்களின் மனக்குமுறலாக இந்த கருத்தினை நான் இங்கு பதிவு செய்கிறேன். பல்வேறு கட்சிகளில் தாவி 10 வருடங்களில், பல கட்சிகள் தாவி, இன்றைக்கு முதலீடு செய்த அமைச்சராக இருக்கும் ஒருவர், 90 சதவீத அ.தி.மு.க.வினர் தங்கள் கட்சியில் இணைவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். கேட்க நாதி இல்லை என்ற நிலையில் தான் அவர் இப்படி பேசி வருகிறார்.

    Advertisement

    கூவி கூவி அழைக்கிறீர்களே..

    உங்கள் கட்சி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதால்தானா அ.தி.மு.க.வினரை அழைக்கிறீர்கள்? அல்லது உங்கள் தலைவரின் மக்கள் ஆதரவு குறைந்து விட்டதா?.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உருவாக்கிய கட்சியில் உள்ள தொண்டர்களை, தொடர்ந்து கட்சியில் சேருங்கள் என்று பிச்சை எடுப்பது போல் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு, கூவி கூவி அழைக்கிறீர்களே.. இப்படி அழைத்து வருவது, அ.தி.மு.க. ஆதரவை தேடி வருவது போல தெரிகிறது.

    அ.தி.மு.க. ஒரு சுயமரியாதை இயக்கம் என்றும், அதிகாரத்திற்காக உருவான கட்சி அல்ல. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. அ.தி.மு.கவை அழிக்க நினைக்கும் உங்கள் செயல், யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டு கொள்வதை போன்றது. இனியும் இந்த ஆள் பிடிக்கும் வேலையை தொடர்ந்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். இது இறுதி எச்சரிக்கை.." இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    RB Udhayakumar strongly criticized minister Aadhav Arjuna for claiming that AIADMK cadres would join TVK. Questioning the ruling party’s confidence in its leadership and support base, he said AIADMK workers cannot be lured or bought politically.