கடன் வசூல் ஏஜெண்டுகளுக்கு.. ரிசர்வ் வங்கி புதிய கடிவாளம்! மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி.. புது விதி

  • சென்னை: வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ கட்டாத பட்சத்தில் அவர்களை மிரட்ட கூடாது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

    Advertisement

    வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களை, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) மொபைல் போன் மூலம் மிரட்டுவதும், வீட்டிற்கே வந்து அநாகரிகமாக நடந்துகொள்வதும் அண்மைக்காலமாக பெரும் புகாராக எழுந்து வந்தது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகள், கடன் வாங்கிய நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வசூல் ஏஜெண்டுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ளன.

    மொபைல் போன்களை முடக்க தடை

    தற்போது இஎம்ஐ (EMI) முறையில் மொபைல் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் தவணைத் தொகையைச் செலுத்தத் தவறினால், நிதி நிறுவனங்கள் உடனடியாக அந்த மொபைல் போன்களை செயலிழக்கச் செய்து (Block) விடுகின்றன. இனிமேல், கடன் நிலுவையில் இருந்தாலும் மொபைல் போன்களை உடனடியாக முடக்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

    Advertisement

    ஒருவேளை மொபைல் போனுக்கான கடன் 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே அதை முடக்க முடியும். அதற்கும் முன்னதாக 21 நாட்கள் நோட்டீஸும், அதைத் தொடர்ந்து கூடுதலாக 7 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட வேண்டும். விதிகளை மீறி தவறான முறையில் மொபைல் போன் முடக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹250 வீதம் வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே!

    கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதற்கும், நேரில் சந்திப்பதற்கும் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது இரவு 7 மணிக்கு பின்பாகவோ வாடிக்கையாளர்களுக்கு போன் செய்யவோ, அவர்களின் வீட்டிற்குச் செல்லவோ கூடாது.

    Advertisement

    மேலும், முகவர்கள் கட்டாயம் தங்களின் அடையாள அட்டை (ID Card) மற்றும் வங்கியின் அங்கீகாரக் கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, வாடிக்கையாளர்களின் வீட்டில் ஏதேனும் துக்க நிகழ்வுகளோ அல்லது திருமண நிகழ்வுகளோ நடக்கும் சமயங்களில், கடன் வசூல் தொடர்பாக அவர்களைத் தொடர்பு கொள்ளவே கூடாது என்று மனிதாபிமான அடிப்படையிலான விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    மிரட்டல்களும் அத்துமீறல்களும் இனி "கடுமையான குற்றங்கள்"

    வாடிக்கையாளர்கள், அவர்களின் ஜாமீன்தாரர்கள் (Guarantors) அல்லது அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை முகவர்கள் போனில் மிரட்டுவது, அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை அனுப்புவது மற்றும் பொதுவெளியில் அவமானப்படுத்துவது போன்ற செயல்கள் அனைத்தும் "கடுமையான அத்துமீறல்கள்" (Harsh Methods) என வகைப்படுத்தப்படும்.

    Advertisement

    வங்கி ஊழியர்களோ அல்லது வசூல் முகவர்களோ இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிகப்படியான தொகையை வசூலித்துத் தரும் முகவர்களுக்கு ஊக்கத்தொகை (Incentives) வழங்கும் முறையையும் வங்கிகள் தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

    கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்

    முறையான பயிற்சி: கடன் வசூல் முகவர்கள் அனைவரும் கட்டாயம் 'இந்திய வங்கியியல் மற்றும் நிதி நிறுவனம்' (IIBF) வழங்கும் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

    முன்கூட்டியே அறிவிப்பு: கடன் வசூல் முகவர் வாடிக்கையாளரின் வீட்டிற்கு முதன்முறையாகச் செல்லும் முன்பே, அதுகுறித்த தகவலை வங்கி வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

    Advertisement

    அழைப்புகள் பதிவு செய்யப்படும்: கடன் வசூல் முகவர்கள் பேசும் அனைத்து போன் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும். அந்தத் தரவுகள் குறைந்தது 6 மாதங்களுக்கு வங்கிகளால் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும்.

    புகார் தீர்க்கும் மையம்: கடன் வசூல் தொடர்பான புகார்களைக் கையாளுவதற்கு என்றே வங்கிகள் தனியாக ஒரு பிரத்யேகப் புகார் தீர்க்கும் அமைப்பை (Grievance Redressal Mechanism) உருவாக்க வேண்டும். வாடிக்கையாளரின் புகார் நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்கை வசூல் முகவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.

    வெளிப்படைத்தன்மை: வங்கிகள் தங்களுடன் இணைந்திருக்கும் கடன் வசூல் முகமைகளின் (Recovery Agencies) பட்டியலை தங்களின் இணையதளம் மற்றும் செயலிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

    இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வரைவு விதிகள், கடன் வாங்கிய நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன. வங்கிகள் பொறுப்பான முறையில் கடன் வசூலில் ஈடுபடுவதை உறுதி செய்ய இந்த விதிகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    RBI’s New Loan Recovery Rules: Big Relief for Borrowers Against Agent Harassment