ரியல் எஸ்டேட் சொத்து பதிவில் திருப்பம்! பத்திரப் பதிவில் சிக்கல்? தமிழக அரசுக்கு ஹென்றி கோரிக்கை

  • சென்னை: பதிவுத்துறையில் உள்ள சிக்கல்களை தீர்க்க ரியல் எஸ்டேட் அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு புதிய சீர்திருத்தங்களை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும், நடைமுறைக்கு செட்டாகாத பழைய சட்டங்களை மாற்றி, விதிமுறைகளை எளிமையாக்கி, தேவையற்ற அலைச்சல்களை முழுமையாக நீக்க வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.. இப்படி செய்தால் மட்டுமே பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து இடைத்தரகர்கள் ஆதிக்கமும், லஞ்ச முறைகேடுகளும் ஒழியும் என்றும் பெயிரா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு பதிவுத்துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கும், சொத்து பதிவின் போது பொதுமக்கள் சந்தித்து வந்த நடைமுறை சிக்கல்களுக்கும் தீர்வு காணும் வகையில் புதிய அதிரடி உத்தரவு ஒன்று சமீபத்தில் பிறப்பிக்கப்பட்து.

    Advertisement

    தமிழக பதிவுத்துறை தலைவர்

    தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதுதொடர்பான முக்கிய தெளிவுரை சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண் ந.க.எண். 18549/எல்/2026, நாள்: 05.05.2026) அதிகாரப்பூர்வமாக 4 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.. இந்த அதிரடி நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையானது, தமிழக ரியல் எஸ்டேட் துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பாராட்டி வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், பல ஆண்டுகளாக பதிவுத்துறையில் நிலவி வந்த குளறுபடிகளால் பொதுமக்கள், சிறு முதலீட்டாளர்கள், வீடு வாங்கும் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் கடுமையான தேவையற்ற அலைச்சல், கூடுதல் செலவுகள் மற்றும் மன உளைச்சல்களை அனுபவித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    சர்வே நம்பர் - வழிகாட்டி மதிப்பு

    குறிப்பாக, ஒரு சொத்து அமைந்துள்ள பகுதியின் நான்கு பக்கமும் ஒரே சுற்றுச்சுவருக்குள் இருந்து, அதில் பல புல எண்கள் (Survey Numbers) இருந்தால், அந்தப் புல எண்களிலேயே எது அதிகப்பட்ச வழிகாட்டி மதிப்பைக் (Maximum Guideline Value) கொண்டிருக்கிறதோ, அதையே ஒட்டுமொத்த நிலத்திற்கும் கணக்கிட வேண்டும் என்ற கட்டாய நடைமுறை இதுவரை இருந்து வந்தது. இதனால் நில உரிமையாளர்களுக்குத் தேவையற்ற கூடுதல் பணச்சுமை ஏற்பட்டு வந்தது.

    ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, அந்தந்தப் புல எண்களுக்கு என்ன வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அந்த மதிப்பை மட்டும் கணக்கிட்டுப் பதிவு செய்தாலே போதுமானது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற கூடுதல் பணச்சுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவறான மதிப்பீடுகள் செய்ய கூடாது

    மேலும் சொத்தின் தன்மை, பயன்பாடு, சாலை வசதி, இட அமைப்பு மற்றும் நிலத்தின் தனித்துவ அம்சங்களை கருத்தில் கொண்டு மட்டுமே இனி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதிகப்பட்ச மதிப்பை ஒட்டுமொத்த சொத்திற்கும் திணிக்கத் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    குடியிருப்பு பகுதி, வணிக பகுதி, தொழிற்சாலை பகுதி, விவசாய நிலம் ஆகியவற்றை ஒரே வகை மதிப்பீட்டில் அணுகாமல், அவற்றின் உண்மையான பயன்பாடு மற்றும் நிலைமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவு பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. விவசாய நிலங்களை குடியிருப்பு நிலங்களுடன் ஒப்பிட்டு தவறான மதிப்பீடுகள் செய்யக் கூடாது என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு வருவாய் உயரும்

    இந்தத் துணிச்சலான நிர்வாக முடிவின் மூலம் பதிவுத்துறையில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும், லஞ்சம் மற்றும் முறைகேடுகள் கட்டுப்படும், சொத்து பரிவர்த்தனைகள் சட்டபூர்வமாகவும் எளிமையாகவும் நடைபெறும் என்று டாக்டர் ஆ.ஹென்றி மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமல்ல, ரியல் எஸ்டேட் கூட்டமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, நடைமுறைக்கு பொருந்தாத சிக்கலான விதிமுறைகளைத் தொடர்ந்து எளிமைப்படுத்த வேண்டும் என்றும், இந்த சீர்திருத்தங்கள் தமிழக ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் அரசின் வருவாய் உயர்வதற்கும் வழிவகுக்கும் என்றும் டாக்டர் ஹென்றி தனது அறிக்கையில் பாராட்டி நன்றியினைத் தெரிவித்துள்ளார்...!!!

    English Summary

    Real Estate Property Registration Trend 2026! Federation Chief Henry Urges Tamilnadu Govt To Simplify Rules