ரியல் எஸ்டேட் சீர்திருத்தம்.. 5000 சதுர அடி வரை சுயச்சான்று அனுமதி.. அமைச்சரிடம் பெயிரா சொன்னது என்ன

  • சென்னை: தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களை காலதாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அவற்றை செயல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான டாக்டர் ஹென்றி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமாரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். அப்போது, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால சீர்திருத்தங்கள் தொடர்பான சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

    Advertisement

    தமிழக அமைச்சருடன் சந்திப்பு

    இந்த சந்திப்பு மற்றும் துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து FAIRA நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    5,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயச் சான்றிதழ் அடிப்படையில் அனுமதி வழங்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. வீடு கட்ட விரும்பும் பொதுமக்கள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர கட்டுமானத் தொழில் முனைவோருக்கும் இந்த நடைமுறை பயனுள்ளதாக அமையும்.

    சிறிய குடியிருப்பு கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலேயே அனுமதி வழங்கும் நடைமுறை, தேவையற்ற காலதாமதத்தையும் அலுவலகங்களைச் சுற்றி வரும் நிலையையும் குறைக்க உதவும். இதன் மூலம் பொதுமக்களுக்கு எளிதான நிர்வாகச் சேவை கிடைக்கும்.

    Advertisement

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

    வணிகக் கட்டிடங்களுக்கான அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், TDR தொடர்பான மின்னணு வசதிகளை மேம்படுத்துதல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சேவைகளை முழுமையாக இணையவழி முறைக்கு கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியமான சீர்திருத்தங்களாகும்.

    இணையவழி சேவைகள் மூலம் விண்ணப்பங்களின் நிலையை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும். பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினருக்கு அலுவலகங்களை நாடாமல் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகும்.

    அமைச்சர் ப. ராஜ்குமாருடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் தற்போதைய நிலை, தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், கட்டிட அனுமதி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

    Advertisement

    அமைச்சர் ராஜ்குமாருக்கு நன்றி

    அரசின் சீர்திருத்தங்கள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், நடைமுறையில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் கட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து, தேவையான இடங்களில் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

    "எளிமையான அனுமதி - வெளிப்படையான நிர்வாகம் - விரைவான வளர்ச்சி - பாதுகாப்பான முதலீடு - அனைவருக்கும் வீடு" என்ற நோக்கில் இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும். இந்தச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்" என்று அந்த அறிக்கையில் ஹென்றி விவரித்துள்ளார்.

    English Summary

    Real Estate Sector Gets New Reforms.. Self Certification Approval Up to 5,000 Sq Ft.. What Did FAIRA Tell the Minister?