ரயில்வே வரலாற்றில் ரூ.100 கோடி மெகா அசுர வருவாய்! வியக்க வைத்த கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்

  • சென்னை: இந்தியாவின் மிக நீண்ட தூர ரெயில் சேவையான விவேக் அதிவிரைவு ரெயில், நடப்பு நிதி ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் ஒட்டுமொத்த ரெயில் பட்டியலில் வருவாய் அடிப்படையில் முதலிடத்தை பிடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரை இயக்கப்படும் இந்த ரெயில், கடந்த 2025-2026-ம் நிதி ஆண்டில் மட்டும் சுமார் 100 கோடியே 57 லட்சத்து 48 ஆயிரத்து 56 ரூபாய் வசூல் செய்து ஒட்டுமொத்த ரெயில்வே நிர்வாகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    நாட்டின் 9 மாநிலங்களை கடந்து, சுமார் 4158 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் இந்த விவேக் அதிவிரைவு ரெயில், ஆரம்பத்தில் வாராந்திர சேவையாகத்தான் தொடங்கப்பட்டது. ஆனால், பயணிகளின் அமோக வரவேற்பு காரணமாக, இப்போது தினசரி ரெயிலாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    விவேக் அதிவிரைவு ரெயில் அபார சாதனை

    குமரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் மக்கள் இந்த ரெயிலை தங்களின் குறுகிய தூரப் பயணங்களுக்குப் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை என்றாலும், வட மாநிலங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ரெயில் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து வடகிழக்கு முனையை இணைக்கும் இந்த அசாத்திய வழித்தடத்தில் எந்த நேரமும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கும். இதுதான் இந்த இமாலய வசூலுக்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement


    தெற்கு ரயில்வே வெளியிட்ட டாப் 50 லிஸ்ட்

    இந்நிலையில்தான், தெற்கு ரெயில்வேயின் டாப் 50 வருவாய் ஈட்டிய ரெயில்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியாகி உள்ளது.. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் மற்ற முக்கிய ரெயில்களும் கணிசமான வருவாயை ஈட்டி இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.

    குறிப்பாக, குமரி மாவட்ட மக்களின் சென்னை பயணத்தை மிகவும் எளிதாக்கிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயில் ரூ.6.59 கோடி வசூல் செய்து ஒட்டுமொத்தப் பட்டியலில் 11-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் குறைந்த நேரத்தில் சென்னைக்குக் கொண்டு சேர்க்கும் இந்த வந்தே பாரத் ரெயிலை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    Advertisement

    சர்ப்ரைஸ் வசூல் சாதனை

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி - புனே ரெயில் ரூ.5.14 கோடி வசூலுடன் பட்டியலில் 22-வது இடத்தையும், ஐடி ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தும் கன்னியாகுமரி - பெங்களூரு ரெயில் ரூ.4.04 கோடி வசூலித்து 34-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    அதேபோலவே குமரி மாவட்ட மக்களின் பாரம்பரியமிக்க முதன்மை தேர்வாக இருக்கும் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரெயில் ரூ.3.76 கோடி வருவாயை ஈட்டி இந்த லிஸ்ட்டில் 40-வது இடத்தைப் பிடித்து தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    வந்தே பாரத் சேவை கன்னியாகுமரி வரை கிடைக்குமா?

    இந்த வருவாய் விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, தென் மாவட்டப் பயணிகளின் தேவைகள் மற்றும் வந்தே பாரத் ரெயிலுக்கான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, நெல்லை மற்றும் மதுரை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைகளை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கங்கள் ரெயில்வே நிர்வாகத்திற்குத் தீவிரமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

    Advertisement

    ஒருவேளை இந்த நீட்டிப்பு நடக்கும் பட்சத்தில் தென் மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதி மேலும் மேம்படுவதோடு, தெற்கு ரெயில்வேயின் வருவாயும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!!!

    English Summary

    ₹100 Crore Revenue Hunt by a Single Train! Which Kanyakumari Route Left Indian Railways Astonished with Its Massive Earnings?