சென்னை: பதிவுத்துறையை தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்க்கக் கூடாது என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி வேண்டுகோள் விடுத்துள்ளார்.. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு, பொதுமக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் அரசின் நேரடி சேவை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் இதுதான்: "ஐந்து மாதிரி பதிவுமையங்களுக்கான ₹67.20 கோடியில் கட்டிடங்கள், மென்பொருள், கணினி உபகரணங்கள், இணைய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான மொத்தச் செலவு எவ்வளவு என்பதையும் அறிவிக்க வேண்டும்.
அடுத்த 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவுகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய சேமிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு வெளியிட வேண்டும். அரசின் நேரடி நிர்வாகத்தில் பதிவுத்துறையை நவீனமயமாக்குவதற்கான மாற்றுத் திட்டத்தையும் உருவாக்க வேண்டும். மென்பொருள் உருவாக்கம், தரவுத்தள மேலாண்மை, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் ஆவணச் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்குத் தமிழக இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். பதிவுத்துறைக்கென நிரந்தரத் தொழில்நுட்பக் குழுவை உருவாக்கி, எத்தனை பணியிடங்களை உருவாக்க முடியும், அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டு வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அரசின் முக்கிய சேவைகள் தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டை முழுமையாகச் சார்ந்திருக்கக் கூடாது. பதிவுத்துறையை நம்பி ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பதிவுத்துறை டிஜிட்டல் முறைக்கு மாறுவதால் இவர்களுடைய வேலை பாதிக்கப்படக் கூடாது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை இவர்களுக்கு வழங்க வேண்டும். ஆவணங்கள் தயாரிப்பது, சட்ட ஆலோசனை வழங்குவது, சொத்து ஆவணங்களைச் சரிபார்ப்பது போன்ற பணிகளை தொடர்ந்து செய்வதற்கான வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல், அரசு இ-சேவை மையங்கள் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளைப் பெற வழிவகை செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆவண விவரங்களைப் பெறுவது, விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது, புகார்களை தெரிவிப்பது போன்ற சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும். ஒவ்வொரு சேவைக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிப்பதையும் தடுக்க வேண்டும் நிலம், வீடு வாங்குவது என்பது பலருடைய வாழ்நாள் உழைப்பு. அப்படிப்பட்ட சொத்துகளின் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்போது, அவற்றை அரசுதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆவணங்களில் யாரும் முறைகேடாக மாற்றம் செய்யாமலும், மக்களின் தகவல்கள் திருடப்படாமலும் இருக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதேபோல், பத்திரப்பதிவு அலுவலகங்களில் மின்சாரம், இணைய வசதி, குடிநீர், கழிவறை, மக்கள் காத்திருப்பதற்கான இடம் என அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். பழைய கட்டிடங்களைச் சீரமைப்பதுடன், தேவையான இடங்களில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் புதிய அலுவலகங்களையும் கட்ட வேண்டும். ஐந்து மாதிரி பதிவுமையங்களுக்காகச் செலவிடப்படும் ₹67.20 கோடி எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அரசு முழுமையாக வெளியிட வேண்டும். தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வர எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் தொழில் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது, மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் அரசின் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது என அனைத்தையும் உள்ளடக்கிய திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்பதே FAIRA-வின் கோரிக்கை.இளைஞர்களுக்கு வேலை
வாழ்வாதாரப் பாதுகாப்பு
ஆவணப் பாதுகாப்பு