“எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.. ஆனால்..” - ஐகோர்ட் நீதிபதிகள் காட்டம்!

  • சென்னை: "எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. ஆனால், மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக, வாக்களித்த மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது. இது வாக்காளர்களை அவமதிக்கும் செயல்" என ஐகோர்ட் கண்டித்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி ராஜினாமா செய்தவர்கள் தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் எழுந்து, மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. வாக்களித்த மக்களின் விரல் மை காய்வதற்கு முன், ராஜினாமா செய்து இன்னொரு தேர்தலை சந்திக்க வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், அரசியல் சாசனத்தின்படி, இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் முறைப்படுத்தலாம், ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதால் இந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    Advertisement

    அப்போது நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக, வாக்களித்த மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது எனத் தெரிவித்தனர்.

    மேலும், இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

    தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது எழுந்துள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    Advertisement

    தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கூட, இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் என சுட்டிக்காட்டினார். மேலும், ஏற்கெனவே எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்த நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து, விசாரணையை 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    English Summary

    “MLAs have the full right to resign. However, by resigning without valid reasons, those elected by the people have insulted the very voters who elected them. This is a farce; it is an act that disrespects the voters,” the High Court observed critically.