வருவாயை பெருக்க.. பட்ஜெட்டுக்கு முன் தமிழக நிதி நெருக்கடியை தீர்க்க 6 பேர் கொண்ட சூப்பர் டீம்

  • சென்னை: மாநிலத்தின் வருவாயை பெருக்குவதற்காக பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைத்து வருவாயை பெருக்கவே தவெக அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஏராளமான நலத்திட்டங்கள் திறம்படச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும், அதிகரித்து வரும் லஞ்ச ஊழல் மற்றும் மேலாண்மை சிக்கல்கள் காரணமாகக் கடனின் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே போவது மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

    Advertisement

    வருவாய் தீர்க்க குழு

    அதிலும் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய போகிறது.. எனவே இந்த நிலுவை கடன்களைக் குறைப்பதும், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் வருவாயைப் பலமடங்கு பெருக்குவதும் அந்த அரசிற்கு மிகப்பெரிய கடமையாக உருவெடுத்துள்ளது.

    இப்படியொரு இக்கட்டான பொருளாதார சூழலை சமாளிக்கவும், தமிழ்நாட்டின் நிதி ஆதாரங்களை அதிகரிக்கவும் தவெக அரசு சிறப்பு 'வருவாய் பெருக்கக் குழு' ஒன்றை அமைத்துள்ளது. மாநிலத்தின் கடன் சுமையைக் குறைத்து, புதிய வருவாய் வழிகளைக் கண்டறிவதே இந்தக் குழுவின் முதன்மை இலக்காகும்.

    Advertisement

    கடன் தீருமா - அரசாணை வெளியீடு

    இதுகுறித்து நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்கவும், வருவாய் கசிவுகளைத் தடுத்து நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும், மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் உறுப்பினர்களாக பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை நிபுணர் அரவிந்த் மோடி, முன்னாள் ஐஆர்எஸ் அலுவலர் நஜீப் ஷா, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    நிதி ஆதாரங்களை பெருக்க குழு

    இந்தக் குழுவானது மாநிலத்தின் நிதித் தற்சார்பை வலுப்படுத்துதல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், வரி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை மேம்படுத்துதல், வருவாய் கசிவுகளைத் தடுத்தல், வரி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் வரி விலக்குகளை முறைப்படுத்துதல், அத்துடன் புதிய மற்றும் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களை கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை நிலையாக அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசுக்கு 3 மாதங்களில் பரிந்துரைக்கும்.

    இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை இணைச் செயலர் ராஜகோபால் சுங்கரா செயல்படுவார். தேவைப்பட்டால் டாஸ்மாக், பத்திரப்பதிவு, கனிம வளம், வணிக வரி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கு தனித்தனி துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம். மேலும், எந்தவொரு அரசுத் துறை அல்லது அதிகாரிகளிடம் இருந்தும் நேரடியாக ஆவணங்கள் மற்றும் தரவுகளைக் கோரும் அதிகாரமும் இக்குழுவுக்கு தரப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அனுபவம் + நிபுணத்துவம்

    இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் கே.பி. கிருஷ்ணன் மற்றும் வரிக் கொள்கை நிபுணர் அர்பிந்த மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பொருளாதார துறையில் ஆழ்ந்த அனுபவமும் நிபுணத்துவமும் மிக்கவர்கள் என்பதால், இவர்கள் அளிக்கும் ஆய்வறிக்கை தமிழக அரசின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களையும் நிதி மேலாண்மையையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் எனப் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்..!!!

    English Summary

    Revenue Boost! Tamil Nadu Forms 6 Member Expert Panel Ahead of Budget 2026