சென்னை: தமிழ்நாட்டில் எல்லா பத்திரப்பதிவு அலுவலங்களிலும் நல்ல நாட்களில் தான் பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெறும். அந்த நாள் விடுமுறையாகவே இருந்தாலும் அன்று சிறப்பு வேலை நாட்களாக மாற்றப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறுவது வழக்கம். பொதுவாக ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு அன்று தான் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறும். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஒரே நாளில் 16,946 பத்திரங்கள் பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.172 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கும் பலர், நல்ல நாள் பார்த்து பத்திரப்பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். முஹூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். எனினும் ஆடி மாதத்தில் மட்டும் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிக குறைவாகவே இருக்கும். பலர் ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதை விரும்ப மாட்டார்கள். எனவே சொத்து வாங்குவதும், பத்திரப்பதிவு செய்வதும் மற்ற மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஆடியில் குறைவாக இருக்கும்.
அதேநேரத்தில், ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு மங்கலகரமான நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் புதிய முயற்சிகளை தொடங்குவது, வீடு, மனை மற்றும் நிலம் வாங்குவது போன்றவற்றில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஆடி மாதமாக இருந்தாலும் ஆடிப்பெருக்கு நாளில் மட்டும் விஷேசங்கள் நடைபெறும். ஆனால் திருமணம் நடைபெறாது. எனினும் புதிய வீடு பால் காய்ச்சுவது, பத்திரப்பதிவு அதிகரிப்பது நடக்கும். அந்த வகையில் ஆடிப்பெருக்கு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் திரளானோர் தங்களது சொத்து ஆவணங்களை பதிவு செய்தார்கள். தமிழகத்தில் சாதாரண நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 13 ஆயிரத்து 500 பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் கிடைப்பது வழக்கம். ஆனால், ஆடிப்பெருக்கு நாளான 3-ந் தேதி மட்டும் 16 ஆயிரத்து 946 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அரசுக்கு ஒரே நாளில் ரூ.172 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாதாரண நாளுடன் ஒப்பிடுகையில் ஆடிப்பெருக்கு நாளில் 3 ஆயிரத்து 446 பத்திரங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல் அரசுக்கு கிடைத்த வருவாயும் ரூ.72 கோடி அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே பத்திரப்பதிவுத் துறை அன்றைய தினம் கூடுதல் டோக்கன்கள் அளித்திருந்தது. இதனால் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெற்றுள்ளது.