சென்னை: தமிழக மக்களின் அன்றாட முக்கிய உணவான அரிசியின் விலை கடந்த சில வாரங்களாகக் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பின் பணவீக்கம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
வரலாறு காணாத வகையில், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரு மூட்டை அரிசிக்கு ₹300 முதல் ₹600 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலேயே நெல் வரத்து குறைந்து, பெரும்பாலான அரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களையும் விவசாயிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்டாவிலேயே நெல் பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
தமிழக சில்லறை மற்றும் மொத்த விற்பனைச் சந்தைகளில் அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எகிறியுள்ளது. தரமான சாப்பாட்டு அரிசி முதல் இட்லி, தோசைக்கு பயன்படும் புழுங்கல் அரிசி வரை அனைத்து ரகங்களின் விலையும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது. 26 கிலோ கொண்ட ஒரு அரிசி மூட்டைக்கு சராசரியாக ₹300 முதல் ₹600 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு ₹12 முதல் ₹25 வரை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்குச் சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக பண்டிகைக் காலங்களிலோ அல்லது வரத்துக் குறையும் போதோ மூட்டைக்கு ₹50 அல்லது ₹100 உயர்வது வழக்கம். ஆனால், ஒரே மாதத்தில் ₹600 வரை விலை உயர்ந்திருப்பது கடந்த 46 ஆண்டுகளில் இதுவே முதல்முறை எனச் சந்தை வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த விபரீத விலை உயர்வுக்குப் பின்னணியில் தமிழக அரிசி ஆலைகளின் வீழ்ச்சி முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முன்பு சுமார் 1 லட்சம் நவீன மற்றும் பாரம்பரிய அரிசி ஆலைகள் இயங்கி வந்தன. ஆனால், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, போதிய நெல் கிடைக்காமை மற்றும் தொடர் நஷ்டம் காரணமாகப் படிப்படியாக ஆலைகள் மூடப்பட்டு, தற்போது வெறும் 25 ஆயிரம் அரிசி ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போதிய நெல் வரத்து இல்லாததால் பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் ஆலைகளும் முழுத்திறனுடன் இயங்க முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் உணவளித்து வந்த தஞ்சை டெல்டா மாவட்ட மக்களே, தற்போது தங்களின் அன்றாடத் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில அரிசியை நம்பி இருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு ரயில் மற்றும் லாரிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், அந்தச் செலவும் அரிசி விலையிலேயே சேர்க்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் சாதாரணக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர மளிகைப் பட்ஜெட் கடுமையாகத் துண்டாடியுள்ளது. அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், நலிவடைந்து வரும் அரிசி ஆலைகளைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்: விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதை எளிதாக்கி, உள்ளூர் ஆலைகளுக்கு போதிய நெல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மூடப்பட்ட அரிசி ஆலைகளை மீண்டும் திறக்க மானிய விலையில் மின்சாரம் மற்றும் நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்பட வேண்டும். வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்த, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தரமான அரிசி விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். உணவுப் பொருட்களின் அடிப்படைத் தேவையான அரிசியின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், அரசு இனியும் தாமதிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுத்து சாமானியர்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.46 ஆண்டுகளில் இல்லாத கடும் விலை உயர்வு
1 லட்சத்தில் இருந்து 25 ஆயிரமாகக் குறைந்த ஆலைகள்
நெற்களஞ்சியத்திற்கே வெளிமாநில அரிசியா? தலைகீழான நிலைமை
மக்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை