தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு.. 15 நாளில் கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரிப்பு.. என்ன காரணம்?

  • சென்னை: தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு முன்பு அரிசி விலை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய தேவையான அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு முன்வந்து ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் அரிசி விலை உயர்வைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    Advertisement

    கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக பொன்னி அரிசி விலை இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின் விலை 50 ரூபாயில் இருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. கர்நாடக பொன்னி அரசி, 65 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், அது மேலும் 15 ரூபாய் விலை உயர்வு கண்டு 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை லை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்தது தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

    Advertisement

    பருவ மழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்ததும் அரிசி விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், அடுத்த சில மாதங்களில் அரிசி வரத்து குறையும் என்பதை எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் இவற்றின் மூலம் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். பல்வேறு தரப்பினரின் குரல்களையும் பொருட்படுத்தி, அரசு, அரிசி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    English Summary

    Following a rise in rice prices in Tamil Nadu two weeks ago, reports indicate that prices have now increased by up to another ₹15 per kg. The public is shocked by this hike in rice prices.