நாட்ல மழை இல்ல.. உங்க கையில மட்டும் எப்படி இவ்வளவு துட்டு! ரேட்டை ஏற்றிய ரோலக்ஸ்! ஆனாலும் ட்விஸ்ட்!

  • சென்னை: உலகின் முன்னணி ஆடம்பர கடிகார நிறுவனமான ரோலக்ஸ், தனது தங்கக் கடிகாரங்களின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே ஒருமுறை விலையை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது சராசரியாக மேலும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன், ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஆடம்பரப் பொருட்கள் சந்தையில் விற்பனை மந்தமாக இருக்கும் சூழலில் கூட, மிக உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களிடையே தங்கக் கடிகாரங்களுக்கான தேவை குறையவில்லை என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள்.

    Advertisement

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் ரோலக்ஸ் தனது கடிகாரங்களின் விலையை உயர்த்தியிருந்தது. அதன்பிறகு சில மாதங்களிலேயே மேலும் 5 சதவீதம் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டாவது விலை உயர்வை யாருமே எதிர்பார்க்கவில்லை.

    Advertisement

    ரோலக்ஸ் மட்டுமின்றி, உலகின் மற்ற முக்கிய ஆடம்பர நிறுவனங்களும் தங்களது தங்கக் கடிகாரங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக கார்டியர் நிறுவனத்தின் சில தங்கக் கடிகாரங்களின் விலை கடந்த மாதம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் இதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, உலக சந்தையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்து, தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 4,200 அமெரிக்க டாலர் அளவை எட்டியுள்ளது. இதன் நேரடி தாக்கம் தங்கத்தில் தயாரிக்கப்படும் ஆடம்பரக் கடிகாரங்களின் விலையிலும் பிரதிபலித்து வருகிறது.

    Advertisement

    சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் சற்று பின்வாங்கியிருந்தாலும், மிகப்பெரிய செல்வந்தர்கள் மத்தியில் உயர்தர கடிகாரங்களுக்கு இருக்கும் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் அதிக லாபம் தரக்கூடிய தங்கம் மற்றும் விலை உயர்ந்த மாடல்களை விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

    இதற்கிடையில், ரோலக்ஸின் மிகவும் பிரபலமான 'காஸ்மோகிராப் டேடோனா' தங்க மாடலின் விலை இந்த ஆண்டு மட்டும் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் விலை 33 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த மாடல் கடந்த காலத்தில் ஹாலிவுட் நடிகர் பால் நியூமன் பயன்படுத்தியதன் காரணமாகவும் கடிகார ஆர்வலர்கள் மத்தியியில் இந்த மாடல் தனி மதிப்பைப் பெற்றுள்ளது.

    Advertisement

    சுவிட்சர்லாந்து கடிகாரத் துறையின் ஏற்றுமதி புள்ளிவிவரங்களும் ஆடம்பர சந்தையின் மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. 20,000 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள உயர்தர கடிகாரங்களின் ஏற்றுமதி, கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. தற்போது மொத்த ஏற்றுமதி மதிப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவை இந்த உயர்தர மாடல்களே ஆகும்.

    ரோலக்ஸ் கடிகாரங்களுக்கு உலகளவில் இன்னும் அதிகமான தேவை இருப்பதால், எதிர்காலத்திலும் விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். "ரோலக்ஸ் என்பது ஒரு கடிகாரம் மட்டுமல்ல; அது ஒரு அந்தஸ்தின் அடையாளம். அதனால்தான் விலை உயர்ந்தாலும் வாங்குபவர்கள் குறைவதில்லை" என்று ஆடம்பர சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    ஆடம்பரப் பொருட்கள் சந்தையில் மந்தநிலை நிலவினாலும், உயர்ந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் ஆதரவால் ரோலக்ஸ் போன்ற பிராண்டுகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Rolex hikes gold watch prices by 5% as wealthy buyers continue driving strong demand for luxury timepieces.