பெண்ணிடம் அத்துமீறியதை தட்டிக் கேட்ட தவெக எம்எல்ஏவிடமே எகிறிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலில்

  • சென்னை: சென்னை ராயபுரத்தில் பெண்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டது மற்றும் தவெக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆகிய புகார்களின் பேரில், ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை ராயபுரத்தில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்தில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற இளைஞருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

    Advertisement

    திருமண மண்டபத்தில் வெடித்த காதல் தகராறு

    அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினருடன் திடீரென திருமண மண்டபத்திற்குள் புகுந்தார். வடபழனியில் உள்ள மால் ஒன்றில் வேலை பார்த்து வந்த அந்தப் பெண், சையது இப்ராஹிமும் தானும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், அவருக்காகத் தான் மதம் மாறியதாகவும் கூறினார். தற்போது தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயல்வதாகக் கூறி, கையில் பதாகைகளை ஏந்தி நீதிகேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    போலீஸ் அராஜகம்? - வீடியோ வைரல்

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முயன்றனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    Advertisement

    காவல் ஆய்வாளர் சிதம்பரம், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்த பெண்களை ஒருமையில் பேசியதுடன், அக்பர் அலி என்பவரைக் கடுமையாகத் தாக்கி மண்டபத்தை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனிடையே, மணமகன் சையது இப்ராஹிம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டு, வேறொரு இடத்தில் வைத்துத் திட்டமிட்டபடி திருமணத்தை முடித்துக் கொண்டார்.

    காவல் நிலையத்திற்குள் நுழைந்த தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு

    காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கும், போலீசாரால் தாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் ஆதரவாக ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு நேரடியாக ராயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்றார்.

    Advertisement

    அங்கு இன்ஸ்பெக்டர் சிதம்பரத்திடம், "பொதுமக்களை அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மணமகன் வீட்டாரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறீர்களா?" எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

    மேலும், "நீங்கள் முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் பணியாற்றுகிறீர்கள், நீங்கள் செய்யும் தவறுகள் அரசுக்குத் தான் கெட்டப் பெயரை ஏற்படுத்தும்" என்றும் சுட்டிக்காட்டினார். இதனால் எம்.எல்.ஏ-விற்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே காவல் நிலையத்திற்குள்ளேயே கடும் வாக்குவாதம் நிலவியது. தவெக எம்.எல்.ஏ இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு முறையான விசாரணை நடத்தவே அவர் அங்கு சென்றதாகத் தெரியவந்தது.

    Advertisement

    காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை

    இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னை ஏமாற்றிய சையது இப்ராஹிம், அவரது குடும்பத்தினர் மற்றும் தனக்கு அநீதி இழைத்த இன்ஸ்பெக்டர் சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

    பொதுமக்களையும், பெண்களையும் ஒருமையில் பேசி தாக்கிய வீடியோ ஆதாரங்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-வுடன் ஏற்பட்ட மோதல் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English Summary

    Based on complaints alleging disrespectful behavior towards women in Royapuram, Chennai, and an altercation with the TVK MLA for Royapuram, Vijay Dhamu, Royapuram Police Inspector Chidambara Bharathi has been transferred to the 'waiting list'.