ராயபுரம் காவல் ஆய்வாளருடன் தவெக எம்எல்ஏ விஜய் தாமு வாக்குவாதம்.. என்ன நடந்தது?

  • சென்னை: ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியை தவெக எம்எல்ஏ விஜய் தாமு காவல் நிலையத்திலேயே மிரட்டியதாக வீடியோ வெளியாகியது. காவல் நிலையத்தில் நடந்தது என்ன? தவெக எம்எல்ஏ விஜய் தாமு காவல் ஆய்வாளரை மிரட்டியதன் பின்னணி தொடர்பாக விசாரித்தோம். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சையத் இப்ராஹிம் என்ற இளைஞருக்கும், ஒரு பெண்ணுக்கும் இன்று திருமணம் நடக்கவிருந்தது. அப்போது திருமண மண்டபத்திற்கு வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தானும் சையத் இப்ராஹிமும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறி இருக்கிறார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணுடன் வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமண மண்டபத்தில் நுழைந்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இதுதொடர்பாக இளைஞர் தரப்பு ராயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. அங்கு வந்த காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, அந்த பெண் மற்றும் உறவினர்களுடன் சமாதானம் பேசி இருக்கிறார்.

    ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண்ணுடன் வந்த உறவினரை தாக்கி இருக்கின்றனர். இதன்பின் பெண் தரப்பு ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமுவிடம் புகார் அளித்துள்ளது. இதனையறிந்து பெண் தரப்புடன் ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியிடம், தாங்கள் முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துறையின் கீழ் பணியாற்றுகிறீர்கள்.

    Advertisement

    எந்த தவறு நடந்தாலும், முதல்வர் விஜய்யையே சாரும். இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்காமல் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? பணம் வாங்கி கொண்டு இளைஞர் பக்கம் சாதகமாக பேசுகிறீர்களா? அந்த பெண்ணிடம் உரிய ஆதாரம் இருக்கிறது. முன்னதாக புகார் அளிக்கும் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் பெண்ணுடன் வந்த உறவினர்களை காவல் துறையினர் தரக்குறைவாக பேசி இருக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் ராயபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Royapuram Police Station Clash: Why TVK MLA Vijay Dhamu Threatened Inspector Chidambara Bharathi