பெங்களூரு: இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று போற்றப்படும் பெங்களூருவில் இன்று சராசரி வாழ்க்கை வாழ்வதே பெரும் சிரமமாகி வருகிறது. அங்கு கற்பனையே செய்ய முடியாத இரண்டு விஷயங்கள் என்றால், ஒன்று போக்குவரத்து நெரிசல்; இன்னொன்று வாழ்க்கைச் செலவு. இரண்டுமே அசாதாரணமானது. இந்தச் சூழலில், பெங்களூரில் வாழ்க்கை நடத்த மாதம் ரூ.1 லட்சம் வேண்டும் என்று தனியார் நிறுவன பெண் ஊழியர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனைப் பலரும் ஆமோதித்துள்ளனர்.
இந்தியாவில் அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ள நகரம் என்றால் அது பெங்களூருதான். திரும்பிய பக்கமெல்லாம் ஐடி நிறுவனங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. பெங்களூருவில் கடந்த 2000-ஆம் ஆண்டையும், 2026-ஆம் ஆண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மக்கள் தொகை தொடங்கி கட்டிடங்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை, வாழ்க்கைத் தரம் என எல்லாமே அடியோடு மாறியிருக்கின்றன. 2000-ஆம் ஆண்டுகளில் பெங்களூரின் மக்கள் தொகை 56 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்று அது 1.40 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, 2000-ஆம் ஆண்டுகளில் 15 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, இன்று 1.25 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், 2000-களில் நகரின் பரப்பளவில் சுமார் 30% - 35% அளவிற்கே நகரக் கட்டமைப்பு விரிவடைந்திருந்தது. ஆனால், இன்று 80% முதல் 90% அளவிற்கு நகரக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது. 2000-களில் வெறும் 500 - 700 ஐடி நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், இன்று 5,500-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2000-ஆம் ஆண்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த நகரமாக பெங்களூரு இருந்தது. கிட்டத்தட்ட அன்றைய கோவை நகரத்தைப் போலத்தான் பெங்களூருவும் இருந்தது. ஆனால், இன்று பெங்களூரு நகரம் சென்னையையே ஓரம் கட்டும் அளவிற்கு வாழ்க்கைச் செலவு நிறைந்த கடினமான நகரமாக மாறியுள்ளது. ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கு கீழ் சம்பளம் வாங்குவோர் பெங்களூரில் வாழ்க்கை நடத்துவது சிரமம் என்ற நிலைக்கு நிலைமை மாறியுள்ளது. ஏனெனில், பெங்களூருவில் அத்தியாவசியமான வீட்டு வாடகை, வாகனக் கட்டணங்கள் என அனைத்துமே கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துவிட்டன. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அட்ரிமி என்ற பெண் ஊழியர், அங்கு வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகள் குறித்து ஒரு வீடியோவைப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "பெங்களூருவில் உயர்தரமான குடியிருப்பு கட்டிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்தால், அதன் வாடகை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை உள்ளது. அதைத் தாண்டி தனி வீடுகளின் வாடகை ரூ.30 ஆயிரம் வரை இருக்கிறது. இங்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.2 கோடி வேண்டும். அதுவே உயர்தரமான பகுதியில் வாங்கினால் வீட்டின் விலை ரூ.4 கோடி வரை இருக்கும். பெங்களூருவில் வாழ்க்கையை நடத்த வேண்டுமெனில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1 லட்சம் வேண்டும். ரூ.4 லட்சம் மாதாந்திர வருமானம் கிடைத்தால் ஓரளவுக்கு நன்றாக வாழலாம். அதனால் பெங்களூரு நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வதற்கான நகரம் கிடையாது. எனவே, மாதம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் பெங்களூருவுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். அவர் கூறுவதில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. சென்னையை ஒப்பிடும்போது, பெங்களூருவில் வாடகையும் அதிகம்; வாழ்க்கைச் செலவும் மிக அதிகம். சென்னையில் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை வாங்குவதும், பெங்களூரில் ரூ.1 லட்சம் வாங்குவதும் ஒன்றுதான் என்கிறார்கள். அந்த அளவிற்கு அங்கு செலவுகள் அதிகமாக இருக்கின்றனஉங்கள் முகத்தை வாடகைக்கு விட்டால் லட்சங்களில் வருமானம்? உலகளவில் வெடிக்கும் புதிய AI ட்ரெண்ட்!