சென்னை: தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தின்போது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய உரையைத் திரித்து வெளியிட்டு அவதூறு பரப்பியதாக, பிரபல தேசிய ஆங்கிலச் செய்தி நிறுவனங்களின் மூத்த ஊடகவியலாளர்களுக்கு திமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளுக்கு உரிய நீரைப் பெற்றுத்தரக் கோரியும் தஞ்சாவூரில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி வழக்கின் நியாயங்களையும் விவசாயிகளின் நிலையையும் சுட்டிக்காட்டிப் பேசினார். ஆனால், இந்த உரையைத் தவறாகப் புரிந்துகொண்டு, சில தேசிய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக என்டிடிவி செய்தி நிறுவனத்தின் மேலாண்மை ஆசிரியர் சிவ அரூர் மற்றும் இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் அக்சிதா நந்தகோபால் ஆகியோர் உதயநிதியின் உரையைத் தவறாகக் மேற்கோள் காட்டி, அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி. வில்சன் முறைப்படி சட்டப்பூர்வ வழக்கறிஞர் நோட்டீஸை அனுப்பியுள்ளார். 'பி.வில்சன் அசோசியேட்ஸ்' சட்ட நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: பொது மன்னிப்பு: உதயநிதி ஸ்டாலினின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதற்கு, சம்மந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். வீடியோக்களை நீக்க உத்தரவு: யூடியூப், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அவதூறான மற்றும் சோடிக்கப்பட்ட அனைத்து வீடியோக்கள், செய்திக் குறிப்புகள் மற்றும் ஒளிபரப்புகளை உடனடியாக முழுமையாக அகற்ற வேண்டும். ரூ.100 கோடி நஷ்டஈடு: திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அவதூறுப் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் புகழுக்கு உண்டான களங்கத்திற்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். இந்த நோட்டீஸில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக, அவதூறு வழக்கின் மூலம் பெறப்படும் ரூ.100 கோடி நஷ்டஈட்டுத் தொகை முழுவதையும், காவிரி நீர் கிடைக்காமல் பயிர் இழப்பையும் பொருளாதார இழப்பையும் சந்தித்த தமிழக டெல்டா விவசாயிகளின் நலனுக்காகவும் நிவாரணத்திற்காகவும் முழுமையாக வழங்க உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் இதற்கான உரிய பதிலை வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தஞ்சாவூர் பேச்சைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகள், கைது படலங்கள் மற்றும் நீதிமன்றப் பிணை நடவடிக்கைகளுக்குப் பிறகு, தற்போது தேசிய ஊடகங்களுக்கு எதிராக திமுக சட்டப்பூர்வப் பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தைத் திசைதிருப்பும் நோக்கில், சில ஊடகங்கள் 'கட், காபி, பேஸ்ட்' முறையைப் பயன்படுத்தி பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பொய்ச் செய்திகளுக்குச் சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் பேச்சு - வெடித்த புதிய சர்ச்சை
ரூ.100 கோடி நஷ்டஈடு கோரி நோட்டீஸ்
விவசாயிகளுக்கு நிதியை வழங்க முடிவு
அரசியல் களத்தில் புதிய பரபரப்பு