தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.. பின்னணி என்ன?


  • சென்னை: பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அரசகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் சட்ட அனுமதிகளை பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசகுமாரை 2 வாரங்களுக்கு முன்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    திமுக பிரமுகரான இவர், கட்சிப் பெயரை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அடுத்தடுத்து புகார்களை அளித்திருக்கின்றன.

    இதையடுத்து அரசகுமாரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் கல்வித்துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி இந்த பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவர் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமார் பெயரும் எஃப்ஐஆரில் இடம்பெற்றுள்ளது.

    Advertisement

    மேற்கு மாவட்டங்களான சேலம், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேலான தனியார் பள்ளிகளிடம் இருந்து அரசகுமார் பணம் பெற்றது உறுதியானதாக சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சியின் போது கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கு விருந்து அளித்து அவர்களுடன் நெருக்கமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த உத்தரவை போட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் அரசகுமார் மட்டுமல்லாமல் மோசடியில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Rs.100 Crore Private School Scam: Chennai Commissioner Orders Goondas Act Against Prime Accused Arasakumar