சென்னை: இந்தியாவில் செயல்பட்டு வரும் 'மைக்ரான்' கம்பெனி தனது ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தை விட பல மடங்கில் போனஸ் வழங்கி உள்ளது. குறிப்பாக ரூ.20 லட்சம் வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனம் வழங்கிய தீபாவளி போனஸ் பற்றிய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அதேவேளையில் தீபாவளி போனஸ் கிடைக்காதவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அப்படித்தான் 'ரெடிட்' சமூக வலைதளத்தில் தற்போது தீபாவளி போனஸ் தொடர்பான பதிவுகளை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வலைதளத்தில் ஒருவர், ''இந்திய ஊழியர்களுக்கு என்ன மாதிரியான போனஸ்கள் வழங்கப்படுகின்றன. இன்ஜினியர், சீனியர் இன்ஜினியர், பணியாளர், லீட் உள்ளிட்டவர்களுக்கு பதவிகளை பொறுத்து போனஸ் தொகையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஒருவர், ''மைக்ரான் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த எனது நண்பருக்கு ரூ.6.5 லட்சம் போனஸாக கிடைத்தது. அக்டோபர் மாதச் சம்பளத்துடன் இந்த போனஸ் தொகையும் வழங்கப்பட்டதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்'' என்று கூறினார். இதை பார்த்து பலரும் வியப்படைந்தனர். இதையடுத்து இந்த விவாதம் அப்படியே எக்ஸ் வலைதளத்தை நோக்கி சென்றது. அதில் ஒருவர், சுமார் 7-8 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் பெறும் வகையில் புதிதாக பணியில் சேர்ந்தவருக்கு இந்த முறை ரூ.12 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், ரூ.8 லட்சம் மதிப்பிலான 'ரெஸ்ட்ரிக்டட் ஸ்டாக் யூனிட்கள்' பங்குகளும் வழங்கப்ட்டுள்ளது. மொத்தமாக ரூ.20 லட்சம் வரை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.12 லட்சம் ரொக்கம் அக்டோபர் மாத சம்பளத்துடன் வழங்கப்பட்டது. அதில் சுமார் 2.7 முதல் 2.8 லட்சம் ரூபாய் வரை வரி பிடித்தம் செய்யப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் (RSUs) அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக ஊழியருக்கு வழங்கப்படும்'' என கூறியுள்ளார். அதேபோல் இன்னொருவரோ, ''மைக்ரான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை திட்டமிட்டு வருகிறார். ஏனென்றால் போனஸ் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. என்னால் அந்த தொகையை நம்பவே முடியவில்லை. ஆனால் இப்போதுதான் புரிகிறது'' என கருத்து தெரிவித்துள்ளார். கூகுளில் பணியாற்றும் ஒரவர், ''ஆம், போனஸ் தொடர்பான வதந்திகள் உண்மை தான். இதனை என்னால் உறுதிப்படுத்த முடியும். என்னுடைய நெருங்கிய நண்பர் மைக்ரானில் பணிபுரிந்து வருகிறார். அவர் மிகப்பெரிய போனஸ் மற்றும் பங்குகளை பெற்றுள்ளனர்'' என கூறியுள்ளார். 'மைக்ரான்' நிறுவனத்தின் முழு பெயர் 'மைக்ரான் டெக்னாலஜி' ஆகும். இது அமெரிக்காவை சேர்ந்த மல்டிநேஷனல் செமிகண்டக்டர் நிறுவனமாகும். இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் எப்போதுமே ஊழியர்களுக்கு அதிகளவில் போனஸ் வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. தைவானில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டு சம்பளத்துக்கு இணையான போனஸ் கூட இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்வது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.தீபாவளி லீவுக்கு மழை இருக்குமா? சென்னை வானிலை மையம் கொடுக்க முக்கிய அப்டேட்!
திருந்திட்டாங்க.. அரசு அலுவலகங்களில் தீபாவளி ’பரிசு’ வாங்க மாட்டாங்களாம்! கொடுக்கவும் மாட்டாங்களாம்!