சென்னை: ரூ 5000 கோடி முறைகேடு செய்ததாக பாரத் லஜ்னா ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பிரேம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த 2006ஆம் ஆண்டு பிரேம்குமாரால் பிஎல்எம் கூட்டுறவு நிறுவனம் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் 155 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இது 4.64 லட்சம் உறுப்பினர்களை கொண்டது. ஆண்டுக்கு சுமார் 162 கோடி ரூபாய் அளவிலான வரவு செலவுகளை கொண்ட நிறுவனமாக பிஎல்எம் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் குமார் மீது முறைகேடு புகார் அளிக்கப்பட்டு கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. கடந்த மே 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் புகார் அளித்த முன்னாள் தலைமை நிர்வாகி அலுவலர் (சிஇஓ) நவீன், தவறான புரிதலின் அடிப்படையில் பிரேம்குமார் மீது புகார் அளித்ததாகவும் புகாரை திரும்ப பெற விரும்புவதாகவும் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிரேம் குமார் கைது செய்யப்பட்டதாகவும் அக்டோபர் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கைது நடவடிக்கையில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. உறுப்பினர்கள், முதலீட்டாளர்களின் வைப்புநிதிகளுக்கு உரிய முதிர்வுத் தேதியில் வட்டியுடன் பணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு ஆண்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, மத்திய கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிஎல்எம் நிறுவனத்தின் மீதும் அதன் நிறுவனர் பிரேம்குமார் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டிய பிஎல்எம் நிர்வாகம், அனைத்து புகார்களையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.