“சாவே வராதுன்னு தானே சொன்னேன்”.. சட்டசபையில் விஜய் விமர்சித்தது பற்றி ஆர்.எஸ்.பாரதி கொடுத்த விளக்கம்

  • சென்னை: "நல்ல சாவே வராது" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்சி கூட்டத்தில் பேசியது பற்றி இன்று சட்டசபையில் விமர்சித்துப் பேசினார் முதல்வர் விஜய். இந்நிலையில் தான் பேசியது பற்றி விளக்கம் அளித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசுகையில், "கருத்து சுதந்திரம், பேச்சுரிமை இதெல்லாம் எந்த அளவுக்கு எல்லாரும் சரியாக பயன்படுத்துகிறோம் என்பது பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் , அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து கொள்ளலாம். அது கடுமையான விமர்சனங்களாக கூட இருக்கலாம். அதெல்லாம் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

    Advertisement

    நல்ல சாவே வராதாம்

    திமுகவில் இருக்கிற ஒரு மூத்த உறுப்பினர் பேசும்போது சொல்றாரு, அதாவது, மக்கள் அவங்க கட்சிக்கு ஓட்டு போடாததால், அந்த மக்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதாம்? எனக்கு சத்தியமாக புரியவில்லை. அதாவது இத்தனை வருஷமாக, இந்த 50, 60 வருஷமாக இதே மக்கள்தான் அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு இருக்காங்க. அந்த மக்களை பார்த்து, எப்படி இப்படி ஒரு வார்த்தை வருது? என்னால அதை நினைச்சு பார்க்கவே முடியல. அதுதான், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த மனசு எப்போ இல்லையோ, இவங்க எல்லாம் ஏன் அரசியல்ல இருக்க வேண்டும் என்ற அந்த கேள்விதானே வரும்?" என்றார்.

    Advertisement

    ஆர்.எஸ்.பாரதி பேசியது என்ன?

    முன்னதாக சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் செய்தவற்றைப்போல வேறு எவரும் செய்ததில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கூட அங்கே மருத்துவமனையைக் கொண்டுவர முடியவில்லை. ஆலந்தூர் பகுதியினருக்கும் இது பெரும் வசதியாக இருந்தது.

    அந்த மருத்துவமனையில் நோயாளியாகச் சென்றவர்களும், அவர்களின் உறவினர்கள் வாக்களித்திருந்தால்கூட திமுக ஜெயித்திருப்போம். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் காட்டமாக விமர்சித்தார்.

    Advertisement

    ஆர்.எஸ்.பாரதி பேட்டி

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இன்று காலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான காரில் ஒருவரை ஏற்றி கொன்றுள்ளனர். நேற்று சென்னையில் தவெக கட்சியைச் சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    தலைநகரில் உங்கள் கட்சிக்காரரின் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது இன்று சட்டசபையில் பேச வேண்டிய பிரச்சனை. ஆனால் அவற்றை எல்லாம் இப்போது திசைதிருப்பி விட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பதில் சொல்ல தெம்பில்லாமல் ஒரு கபட நாடகத்தை சட்டசபையில் அரங்கேற்றிவிட்டு ஓடியிருக்கிறார் முதல்வர் விஜய்." என்றார்.

    ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

    மேலும் தான் பேசியது பற்றி முதல்வர் விஜய் விமர்சித்தது குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "உணர்ச்சிப்பூர்வமாக பேசுவது இயற்கை.. அதில் உள்நோக்கம் இல்லை. செத்துப்போய்ருவாங்கனு சொல்லலையே.. சாவே வராது என்றுதானே சொன்னேன்.. அவர்கள் எல்லோரும் நல்லா இருக்கணும்.. இவர்கள் ஆட்சியில் எல்லா கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டும். செத்துப்போக வேண்டும் என்று சொல்வதுதான் பாவம். சாவே வராது என்றால் இந்த ஆட்சியில் நடக்கும் கூத்துகளை எல்லாம் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று அர்த்தம்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Chief Minister Vijay criticized DMK Organizing Secretary RS Bharathi in the Assembly today regarding his remark at a party meeting that "one will not have a good death." Amidst this, RS Bharathi has offered an explanation regarding his statement.