“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக!

  • சென்னை: "மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பின்பு காங்கிரசாரை தவிர மற்ற அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்தார்கள். தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திமுக இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது. இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள் என கடுமையாக விமசிக்கப்பட்டது.

    மேலும், திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "20 ஆண்டுகளுக்கும் மேல் நம்முடைய முதுகு மேல் ஏறி நின்று சவாரி செய்த காங்கிரஸ் கட்சி... இன்று நம்முடைய முதுகில் குத்திவிட்டுப் போய் உள்ளது. இதை யாரும் மறந்துவிடாதீர்கள். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு 5 இடங்களில் ஜெயிக்க நம்முடைய உடன்பிறப்புகள், நம்முடைய தலைவருடைய தொண்டர்கள், திமுககாரன்தான் காரணம்" எனக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

    Advertisement

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "உதயநிதியைத் துணை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்கும் தோளில் தூக்கிச் சுமந்த கட்சி காங்கிரஸ் கட்சிதான். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன ஒருவரை அமைச்சராக்கி, துணை முதலமைச்சராக்கிய காங்கிரஸார் தொடர்ந்து ஆதரவு கொடுத்ததை மறந்துவிட்டுப் பேசுகிறார். இதுதான் நன்றிகெட்டத்தனம். தேவையில்லாமல் காங்கிரஸாரின் வாயைக் கிளறிவிட்டார்.

    நான்காம் தேதி ரிசல்ட் வருகிறது. ரிசல்ட் வந்து கொண்டிருக்கும்போதே, மூன்று மணிக்கு டெல்லியிலிருந்து பாஜகவுக்கு ஆணை வந்தது. அதன் பிறகு அதிமுகவும் திமுகவும் சேர்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஐந்து மணிக்கு எங்களுக்குத் தகவல் வந்தது. ரிசல்ட் வந்துகொண்டிருக்கும்போதே, தோற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள்.

    Advertisement

    இதை நாங்கள் வெளியில் சொல்லாமல் இருந்தோம். அதனால்தான் நாங்கள் அவர்களிடம் போகவில்லை. 5 ஆம் தேதி காலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு எடுக்கப்போகிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு வந்ததும், நாங்கள் உடனடியாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினோம். 6 ஆம் தேதி விஜய்க்கு ஆதரவு தரும் முடிவை எடுத்தோம்" எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பின்பு காங்கிரசாரை தவிர மற்ற அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்தார்கள். தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “What Manickam Tagore claims is an outright lie. Congress members are ungrateful. After the election results were declared, everyone—with the sole exception of the Congress members—came to meet DMK President MK Stalin.” stated DMK Organizing Secretary RS Bharathi.