சென்னை: வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி.பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சென்னை மாநகராட்சி முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி 20,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள். தினசரி 40,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்துபவர்கள். தினமும் 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 'திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2026' ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில்) அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இதுவரை குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்ட நிலை மாறி, இனி குப்பைகள் உருவாகும் இடத்திலேயே (வீடுகள்/நிறுவனங்கள்) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
20,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள், தினசரி 40,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்துபவர்கள், தினமும் 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் போன்ற அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் பெரிய வணிக வளாகங்கள், ஐ.டி பூங்காக்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் மற்றும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இதன்கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்தில் (எ.கா: சென்னை மாநகராட்சி இணையதளம்) தங்களைப் பதிவு செய்வது கட்டாயம். மேலும், தங்களின் ஈரக் கழிவுகளை (மக்கும் குப்பை) தங்கள் வளாகத்திலேயே உரமாக்க வேண்டும் அல்லது உயிரி எரிவாயுவாக (Bio-gas) மாற்ற வேண்டும். அதேபோல் குப்பைகளைச் சரியாகப் பிரித்து வழங்காத பொதுமக்களிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ குப்பைகளை வாங்க தூய்மைப் பணியாளர்களுக்கு மறுப்பு தெரிவிக்க அதிகாரம் உள்ளது. விதிகளை மீறுபவர்கள், தவறான தகவல் அளிப்பவர்கள் மீது மத்திய/மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதேபோல கழிவுகள் உருவாகும் இடம், சேகரிப்பு, போக்குவரத்து, மறுசுழற்சி மற்றும் அகற்றப்படும் நிலைகள் வரை அனைத்தையும் துல்லியமாகக் கண்காணிக்க ஒரு மத்திய ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவு மேலாண்மை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மறுசுழற்சி செய்யவே முடியாத, எரிக்க முடியாத மிகக் குறைந்த அளவிலான இறுதி எஞ்சிய கழிவுகள் மட்டுமே குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள பழைய குப்பை மேடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 'பயோ-மைனிங்' (Biomining) முறையில் தரம் பிரித்து சுத்தம் செய்வது உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்தவிதிகளை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "மத்திய அரசின் 'திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026' வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, கீழ்க்காணும் அளவு கோல்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் 'அதிகளவு கழிவு உருவாக்கும் நிறுவனங்களாக' வகைப்படுத்தப்பட்டுள்ளன. 20,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள். தினசரி 40,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்துபவர்கள். தினமும் 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள். இந்த வரையறைக்குள், நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி.பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் அடங்கும். திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளின்படி, சென்னை மாநகராட்சியின் வரம்பிற்குள் உள்ள அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் விவரங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடமிருந்து கடிதம் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யும் நிறுவனங்கள் தங்களது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். குறிப்பாக, மக்கும் கழிவுகளைத் தங்கள் வளாகத்திலேயே உரமாக்க வேண்டும் அல்லது உயிரி எரிவாயுவாக மாற்றும் வசதிகளைச் செய்ய வேண்டும். மேலும், திடக்கழிவு மேலாண்மை குறித்த வருடாந்திர அறிக்கையை மாநகராட்சிக்குச் சமர்ப்பிக்க வேண்டும். பதிவிற்கான தனிப்பட்ட இணைப்பு, சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/blkwaste/registerஎன்ற இணையதளத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்ய, அனைத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களும் இந்த அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.