தவெகவுடன் பாமக கூட்டணியா? திட்டமிட்டு சதி”.. - விசிகவினருக்கு திருமாவளவன் கொடுத்த விளக்கம்!

  • சென்னை: "விசிகவின் வளர்ச்சியை விரும்பாத சிலர் தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது, அமைச்சரவையில் இடம்பெறப் போகிறது என்ற வதந்தியைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தவெக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர இருக்கிறது என்றும், சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம்பெறவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, அது வதந்தி என்றும் உண்மையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில், விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்க நேரலையில் பாமக - தவெக குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். ஃபேஸ்புக் நேரலையில் பேசிய திருமாவளவன், "பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக பின்வாங்குவார்கள். தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள், தவெக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்க மாட்டார்கள்.

    இதன் மூலம், தவெகவுக்கு விசிகவின் ஆதரவு முழுமையாக போய்ச் சேராமல் தடுக்க வேண்டும். விசிகவின் வாக்குகளை தவெகவுக்கு செல்லவிடாமல் தடுக்க முடியும் என பரப்புகிறார்கள். இயக்கத் தோழர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

    Advertisement

    பாமக, பாஜக இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என கடந்த 15 வருடங்களாக சொல்லி வருகிறோம். அந்த நிலைப்பாட்டை ஒரு வாய்ப்பாகக் கருதி, தவெக கூட்டணியில் பாமக இடம் பெறப்போகிறது எனும் வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் அதிமுகவுக்கு வழங்க வேண்டிய ஆதரவை வழங்காமல் நடுநிலை முடிவை எடுத்திருக்கிறார்கள். இடைத்தேர்தல் முடிந்த பிறகு பாமக, தவெகவுடன் கைகோர்க்கும், அமைச்சரவையில் இடம் பெறும், துணை முதலமைச்சர் பதவி என்றெல்லாம் செய்திகளை பரப்புகிறார்கள்.

    ஆட்சி அமைப்பதற்கு முன்பே தவெக பாமக பேச்சுவார்த்தை என பரப்பினார்கள். ஆனால், விசிக, ஐயுஎம்எல், இடதுசாரிகளின் ஆதரவைத்தான் தவெக திரட்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. விசிகவை, தவெக மற்றும் திமுக என இரண்டில் சேரவிடாமல் தனித்துவிடப்பட வேண்டும் எனும் உள்நோக்கத்துடனே வதந்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

    Advertisement

    தவெக - பாமக இடையேயான உறவு எத்தகையது என்பது நமக்கு தெரியாது. அதை பற்றி ஒருபோதும் நாம் சிந்தித்ததில்லை. அதுகுறித்து நாம் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் இருக்கிறோம். ஆகவே நமக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை.

    இதுபோன்ற வதந்திகளை எப்போது வந்தாலும் அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை. தவெகவுடன் நாம் கொண்டிருக்கும் இந்த அரசியல் உறவு திடுமென ஏற்பட்ட உறவு என்றாலும், வரலாற்று, காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட உறவு என்பதை மறுக்க முடியாது" என்று பேசியுள்ளார்.

    English Summary

    VCK leader Thirumavalavan has stated, “Some individuals who do not wish to see the VCK’s growth are deliberately spreading rumors that the PMK is set to join the TVK alliance and secure a place in the cabinet.”